இலங்கையில் இன்று தொழிலாளர் தினம்


கடந்த மே முதலாம் திகதி உலகெங்கிலும் கொண்டாடப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம் இன்று இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் விசாக பூரணை அனுஸ்டிக்கப்பட்டதன் காரணமாக மகாசங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய, அரசாங்கத்தினால் இலங்கையின் தொழிலாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது.

இதன் பிரகாரம் இன்றைய தினம் இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் தமது மே தின பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்தவுள்ளன.

அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு மட்டக்களப்பு ஆலையடி வேம்பில், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், அரசாங்கத்தில் இருந்து அண்மையில் வெளியேறிய 16 பேர் கொண்ட குழுவின் ஒரு சிலரே பங்குகொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜே.வி.பி.யினரின் மே தின நிகழ்வு கொழும்பு கெம்பல் பார்கில் இடம்பெறவுள்ள அதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் மே தின நிகழ்வு காலி சமனல மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் அந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, மலையகத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் மே தின நிகழ்வுகள் இன்று நடத்தப்படவுள்ளன.

அதன்படி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம் தலவாக்கலை பொது மைதானத்தில், கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், இணைத்தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், தமது மே தின நிகழ்வுகளை நுவரெலியா நகரில் நடத்தவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் மே தின நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடத்தப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்குகொண்டிருந்தனர்.

இது தவிர, ஜனநாயக மக்கள் முன்னணியின் மேதின பேரணியொன்று நேற்றைய தினம் கொழும்பு ஜிந்துப்பிட்டியில் இருந்து ஜெம்பட்டா வீதி வரையில் முன்னெடுக்கப்பட்டது

No comments