கர்நாடாகாவில் முதல்வராகப் பதவியேற்று 56 மணி நேரத்தில் பதவி விலகிய எடியூரப்பா!!

பதவியேற்ற 58 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியில் இருந்து பாஜகவின் எடியூரப்பா விலகினார். கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். கர்நாடகா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

ஆனால், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க கர்நாடக கவர்னர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் போதிய எண்ணிக்கை இல்லாததால், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சட்டசபையில் அறிவித்தார் எடியூரப்பா.

அதைத் தொடர்ந்து முறைப்படி ஆளுநர் வாஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

No comments