கண்டுகொள்ளப்படாத அராலிப்படுகொலை தூபி!

1987ம் ஆண்டின் இலங்கை அரசினது யுத்தத்தின் கோரத் தாண்டவத்தால் குருநகரில் இருக்கமுடியாமல் இடம்பெயர்ந்து மக்கள் சென்று கொண்டிருந்தனர்.அவ்வாறு சென்றவர்களில் சிலர்,ஒக்டோபர்,22ம் திகதியன்று சாட்டிக்குச் செல்லும் நோக்கில் அராலி வரை வந்து அங்கிருந்து தீவகத்தின் வடக்குப் பக்கம் நோக்கி தாங்கு வள்ளங்கள் மூலம் கடலில் கடக்க முனைந்தனர்.


திடீரென தோன்றிய இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தியில் இருந்து ஆகாயப்படையினரால் மிக மோசமான முறையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. இதனால் ஒரு வள்ளத்தில் சென்றவர்கள் தாக்குதலுக்குள்ளாகி சுமார் 15 பொதுமக்கள் வரையில் உயிரிழந்தனர்.தாக்குதலில்  அவர்கள் பயணித்த வள்ளமும் கடலில் மூழ்கியது.



இதில் பலியானவர்களென திருமதி சூசை மொனிக்கம்மா, செபதேயு கிறிஸ்ரியன், அந்தோனிப்பிள்ளை இராசதுரை, இராசதுரை றொபினா, இராசரெட்ணம் அகஸ்ரின், திருமதி அகஸ்ரின் கொன்சி, அகஸ்ரின் கொன்சனா (2மாதக்குழந்தை) திருமதி மரியதாஸ் மனோறாணி, மரியதாஸ் சுலோஜினி, திருமதி சேவியர் சலோமைப்பிள்ளை, திருமதி கிறிஸ்துராசா அமலநாயகி, திருமதி மிக்கேல் சிசிலியா, யேசுதாசன் தேன்மொழி, வள்ளம் தாங்கிவந்த இருவர் என 15 பேர் கொல்லப்பட்டனர்.


இவர்களது உடல்கள் ஊர்காவற்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவுத்தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. அதன் தற்போதைய நிலைதான் படத்தில் உள்ளது.


தமிழ் மக்களை படுகொலை செய்த கடற்படை மற்றும் விமானப்படைக்கு வெள்ளையடித்து தேவாலயங்கள் கட்டும் யாழ்.ஆயர் இல்லம் இத்தகைய படுகொலையானவர்களது நினைவு தூபிகளை புனரமைக்க முன்வரவேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments