வெளியே மறுவாழ்விற்கு முன்னணி முன்வரவேண்டும்:குருபரன்


ஆட்சிக்கட்டமைப்பு வெளிகளுக்கு வெளியே பொருளாதார சமூக மறுவாழ்வுக்கான செயற்திட்டங்களை முன்னணி முன்னெடுக்க வேண்டும். இது தமிழ் சூழலில் கூட்டமைப்பு போன்றவற்றை ஓரங்கட்டவும் அவசியமானது. இதை செய்வதற்கான மக்கள் ஆணை முன்னணிக்கு உண்டு என சட்டத்தரணி கு.குருபரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தான் அரசியல் கட்சிகளின் நோக்கம் என்பதால் ஈபிடிபியின் ஆதரவுடன் ஆட்சியமைக்கலாம்; . அவ்வாறு அமைத்தமை அரசியல் சாணக்கியத்தின் வெளிப்பாடு என கூட்டமைப்பின் அடிப்பொடிகள் விளக்கம் தருகின்றனர். முன்னணிக்கு தேர்தல் அரசியல் செய்யத் தெரியாது சபைகளில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இவர்களுக்கு எவ்வாறு சர்வதேச இராஜதந்திரம் தெரியும் என ஏளனம் செய்கின்றனர்.
சாதாரண அரசியல் சூழலில் ஆட்சி அமைப்பது என்பது தான் அரசியல் கட்சியின் முழு முதல் நோக்கம் என்பது உண்மை. ஆனால் விடுதலை அரசியலிற்கான துணை அரசியலாக தேர்தல் அரசியலை நாம் வரையறுப்பதாக இருந்தால் ஆட்சி அமைப்பது முதல் நிலை நோக்கமாக இருக்க முடியாது. ஆட்சி அமைப்பது தான் அரசியலில் முதல் நிலை நோக்கம் என்பதன் மூலம் கூட்டமைப்பு எமதரசியலை சாதரணமயப்படுத்த முயற்சிக்கிறது.
2009க்குப் பின்னரான கூட்டமைப்பு தலைமையின் நோக்கம் இது தான். இனி தமிழ்நாட்டு ஸ்டைல் அரசியல் தான். இன்று சிறீதரன் எம்.பியின் கிளிநொச்சி புகைப்படம் கட்புலனாக புலப்படுத்தி நிற்கும் செய்தி இது தான். இந்த கொண்டாட்டங்கள் நோக்கி தான் எமதரசியல் நகர்கிறது. அதி உச்ச வேதனை தரும் கட்டத்தில் எமதரசியல் நிற்கின்றது. இதற்கு விதி விலக்காக நிற்கும் முன்னணியினர் போற்றுதற்குரியவர்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு உள்ள சவால் இது தான்: பிரதிநிதித்துவ வெளியை விடுதலை அரசியலின் பக்கம் வைத்திருக்க முயற்சிக்கும் அதே வேளை மக்களின் நாளாந்த பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் இயக்கமாகவும்  அமைப்பாகவும் முன்னணி வளர வேண்டும். ஆட்சியில் இல்லா விட்டாலும் அபிவிருத்தி செய்யலாம்.
முதலமைச்சர் பிரதிநிதித்துவ வெளியை ஓரளவு விடுதலை அரசியலோடு வைத்திருந்திருக்கிறார். ஆனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறார். முன்னணி இந்த படிப்பினைகளை உள்வாங்கி செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments