கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் பாரிய நிதி மோசடி!


யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில்  இயங்கிவரும் கல்வியியற்கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களிற்கு உணவு வழங்கவென அரசினால் ஒதுக்கப்பட்ட 15மில்லியன் நிதி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்படவுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கல்வியியற்கல்லூரியில் வதிவிட கற்கை நெறிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் அங்கு கல்வி கற்கும் மாணவர்களிற்கு முழுமையான உணவை வழங்க கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் மாணவர்களிற்கான சீரான உணவு விநியோகத்தை செய்யத்தவறிய நிர்வாகம் அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியை தற்போது அரசிற்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்ட முற்பட்டுள்ள நிலையில் அகப்பட்டுள்ளது. 

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அடுத்ததாக கூடியளவு மாணவர்கள் இலங்கையின் பலபகுதிகளிலிருந்தும் கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்றுவருகின்றனர்.

மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்கும் நிலையமாக உள்ள கல்வியியல் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாது வைத்திருந்ததுடன் மாணவர்களிற்கு தரமான உணவுகளை வழங்கியிருக்கவில்லையென்பதும் அம்பலமாகியுள்ளது.

இதனிடையே குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் செய்திகள் கசிந்ததையடுத்து அதனை மூடி மறைப்பதில் நிர்வாகம் முனைப்பு காட்டிவருவதாக சொல்லப்படுகின்றது.
கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்று வெளியேறுகின்ற மாணவர்களிற்கு தற்போது ஆசிரிய நியமனங்கள் அரசினால் வழங்கப்பட்டும் வருகின்றது.

No comments