தமிழகத்தை ஈழம் போல் அழிக்க மோடி கூட்டம் திட்டம் - வைகோ

நியூட்ரினோ ஆய்வு கூடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். போடி பழைய பஸ் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ உரையாற்றும்போது:-

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். நான் என் உயிரை பற்றிக் கவலைப்படாமல் இதனை தடுப்பேன். இதற்கு மக்களை திரட்டவும், இதன் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வந்துள்ளேன்.

போருக்கு முன்பு ஆயுதங்களை தயார் செய்ய வேண்டும். மக்கள் சக்தியே ஆயுதங்கள். இதில் எனக்கு அரசியல் நோக்கம் இல்லை. தமிழ்நாட்டின் நலனுக்காக, அழிவை தடுப்பது என் கடமை. நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்து ஆராய்ச்சியாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

பொட்டிப்புரத்தில் வீடு கட்டித் தருகிறோம், ஆராய்ச்சியாளர்கள் அங்கேயே தங்குவீர்களா? வாங்கிய சம்பளத்துக்காக அந்த ஆராய்ச்சியாளர் அப்படி கூறி இருப்பார். நான் எல்லா விஞ்ஞானிகளிடமும் பேசிவிட்டு, விவரம் தெரிந்துவிட்டு தான் வந்துள்ளேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற வார்த்தையே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தமிழகத்துக்கு அநீதி இழைத்து விட்டார். நீதியை ஆயிரம் அடிக்கு குழி தோண்டி புதைத்துவிட்டார். இதை சொல்வதால் என் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தாலும், வக்கீல் வைக்காமல் நானே வாதாடுவேன்.

காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே தீர்ப்பில் இல்லாத நிலையில், பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கூடாது என்பதற்காக மோடி காலால் சொன்ன உத்தரவை, நீங்கள் (அ.தி.மு.க. எம்.பி.க்கள்) தலையால் செய்துள்ளீர்கள். நான் எம்.பி.யாக இருந்தால் மோடியை நேருக்கு நேர் கேட்டு இருப்பேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகம் அணை கட்ட முடியாது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருந்ததற்கு கர்நாடக மாநில தேர்தல் மட்டும் காரணம் இல்லை. தமிழ்நாட்டில் உள்ளவர்களை இன்னொரு ஈழம் போல் அழிக்க வேண்டும் என்பது மோடி கூட்டத்தின் திட்டம்.

நியூட்ரினோ ஆய்வு மைய பாதிப்பு குறித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தேன். அவர் இது குறித்து ஆவணங்களை கொடுங்கள் என்று கூறினார். நான் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜனை அனுப்பி வைப்பதாக கூறினேன். ஆனால் சுந்தர்ராஜனை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கொடுக்கவில்லை.

இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர். இனி, நாம் கேரளாவோடு சண்டை போட வேண்டாம். நியூட்ரினோ திட்டத்தை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் முதல்-மந்திரிகள் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி ஆகியோரும் எதிர்க்கிறார்கள். இந்த திட்டத்தை எதிர்த்து தமிழகமும், கேரள மாநிலமும் ஒற்றுமையாய் நிற்போம். அப்போது தான், டெல்லி ஏகாதிபத்தியத்தின் அநீதியை எதிர்க்க முடியும்.

No comments