அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் அரசியல் கைதி!



அனுராதபுரம் சிறையில் சித்திரவதைக்கூடமொன்றினில் தனித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவர் மூன்றாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.


யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியினை சேர்ந்த இராசபல்லவன் தவரூபன்(வயது 37) என்ற அரசியல் கைதியே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த 8ம் திகதி முதல் குதித்துள்ளார்.


அனுராதபுரம் விமானப்படை தளம் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதலிற்கான தகவல்களை வழங்கியதாக கூறி கைதாகியுள்ள இவர் தற்போது அனுராதபுரம் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்.
நோய் வாய்ப்பட்டுள்ள இவரிற்கு விசேட மருத்துவ சிகிச்சைகளை வழங்க யாழ்.போதனாவைத்தியசாலைக்கு அழைத்து செல்லவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


எனினும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் போது தப்பித்து செல்ல இராசபல்லவன் தவரூபன் திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள சிறைச்சாலை அதிகாரிகள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல மறுத்துவருகின்றனர்.


அத்துடன் திட்டமிட்டு தமது குற்றச்சாட்டை நியாயப்படுத்த ஏதுவாக இராசபல்லவன் தவரூபனை ஏனைய தமிழ் அரசியல் கைதிகளிலிருந்து பிரித்து தனி சித்திரவதை கூடத்தில் அடைத்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது. 


நோய் வாய்ப்பட்டுள்ள இராசபல்லவன் தவரூபன் தன்னை ஏனைய அரசியல் கைதிகளுடன் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தனக்கான மருத்துவ சிகிச்சையினை அனுமதித்துதவுமாறு கோரியுமே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடக்கின்ற பெருமளவிலான அரசியல் கைதிகள் அனுராபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

No comments