ஏமாற்று புள்ளிவிபரம் வெளியிடுகின்றது இலங்கை அரசு!


வடக்கில் தமிழ் மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் 64ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு படையினரிடமுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


எனினும் இலங்கை அரசோ வடக்கில் 11 ஆயிரத்து 528.66 ஏக்கர் நிலம் முப்படையினர் வசமுள்ளதாக தெரிவித்துள்ளது.


வட கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் தற்போது 13 ஆயிரத்து 14 ஏக்கர் மட்டுமே உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்.பெற்ற கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 ஆயிரத்து 599.66 ஏக்கர் நிலம் உள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில். 1150 ஏக்கரும் , வவுனியா மாவட்டத்தில் 1872 ஏக்கரும். மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 391 ஏக்கரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 1515 ஏக்கரும் என வடக்கில் 11 ஆயிரத்து 528.66 ஏக்கர் நிலம் முப்படையினர் வசமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 563 ஏக்கரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 766 ஏக்கரும் அம்பாறையில் 156. 40 ஏக்கர் நிலமும் படையினர் வசம் உள்ளதாகவும் இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் 1485 ஏக்கர் நிலமுமாகவே குறித்த 13 ஆயிரத்து 14 ஏக்கர் மக்களிற்கான நேரடி நிலங்கள் படையினர் வசம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.


வடக்கில் மட்டும் 64ஆயிரம் ஏக்கர் நிலம் முப்படைகள் வசமிருந்தே வருகின்றது. அவற்றில் அரச காணிகளையும் வடமாகாணசபை காணிகளை தவிர்த்தும் தனியார் காணிகளை கணக்கில் அரசு காட்டியுள்ளது. 


இதனிடையே மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஆகியன ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது, மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டமை மிகப்பெரிய வெற்றியென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என சொல்லப்பட்ட பிரதேசம். இந்த ஆட்சியிலும் கூட மயிலிட்டி மற்றும் மயிலிட்டி துறைமுகப் பிரதேசம் விடுவிக்கப்படமாட்டாது என உறுதியாக கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments