மக்களை மதியாத அரசு சரியும்! தூத்துக்குடி போராட்டத்திலும் கமல்ஹாசன்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி அருகே வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில் சுமார் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஸ்டெர்லைட்  ஆலையை விரிவாக்கம் செய்து மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்ய ஆலை நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான பணிகளை தொடங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு நோய்கள் வருவதாக எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் இந்த போராட்டம் 49-வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும்  ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் குறித்த போராட்ட களத்திற்கு சென்ற நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ஆதரவைத் தெரிவித்து மக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.

கமல்ஹாசன் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில்:-

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் மக்களை தலை வணங்குகிறேன். நடிகனாகவோ, அரசியல் கட்சி தலைவராகவோ இங்கு வரவில்லை. ஓட்டுக்காகவோ, புகைப்படம் எடுக்கவோ வரவில்லை.  நான் இங்கு  தனி மனிதனாகவே வந்துள்ளேன். தமிழக அரசிற்கு தான் ஸ்டெர்லைடுக்கு எதிராக மக்கள் போராடுவது தெரியவில்லை, மத்தியில் இருப்போருக்காவது கேட்கட்டும் என்றார். நான் தமிழன் உங்களுடனான என் உறவு வெறும் மொழியால் மட்டும் ஏற்பட்டதல்ல உணர்வாலும் ஏற்பட்டது என கூறினார்.

மக்கள் உயிரை காட்டிலும் காப்பர் தொழில் தேவையா என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் உயிரை விட தாமிர வியாபாரம் முக்கியமாக போய்விட்டதா. ஸ்டெர்லைட் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக நடந்து கொள்கின்றன. தாமிர ஆலை வேண்டுமெனில் குடியிருப்பு பகுதியில் வைக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது ஆய்வு நடத்துவதால் எந்த பயனும் இல்லை. முதலில் ஸ்டெர்லைட் ஆலை வைக்கப்பட்டுள்ள இடம் சிப்காட் பகுதியில் வருகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று கமல் கூறியுள்ளார்.

போராட்ட களத்திற்குச் சென்றவிட்டு தனது கீச்சகப்பக்கத்தில் ''மக்களை மதியாத அரசு சரியும்'' என கமல்ஹாசன் பதவிட்டுள்ளார்.
No comments