மக்கள் போராட்டம்:இரணைதீவு நோக்கி பயணம்!

ஆயுதப் போராட்டம் மௌனித்துப் போய் அரசியல் போராட்டம் நம்பிக்கையற்றதாகிவிட்ட சூழலில் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடப் புறப்படுவது ஈழத்தின் புதிய வரலாறாகியுள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டுத்தான் இரணைதீவு மக்களின் இன்றைய எழுச்சிப்போராட்டத்தை அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கேப்பாபுலவு நில மீட்புப் போராட்டம், காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டம் ஆகியனவும் மக்களின் தன்னெழுச்சிகளின் விளைவாவே நடந்தேறின.


அவ்வாறான விளைவின் ஓரங்கமே ஆயுதங்களுக்கு மத்தியில் நிராயுதபாணிகளாக தங்களின் சொந்த மண்ணுக்குள் நுழைய முற்பட்ட இரணைதீவு மக்களின் இன்றைய எழுச்சியாக அமைந்துள்ளது.



கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணியான இரணைதீவு காணி விடுவிப்பு போராட்டம் ஒரு வருடத்தை இன்று பூர்த்தி செய்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பேரணி மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த இரணைமாதா நகரில் கண்டன பேரணியொன்றை இன்று நடத்தியிருந்ததுடன் திடீரென கடலில் இறங்கி கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இரணைதீவு கிராமத்திற்கு செல்லப்போவதாக எச்சரித்துமுள்ளனர்.


இரணைதீவு பகுதியில் முதற் கட்டமாக 186 ஏக்கர் காணியை விடுவிக்கவும் இதற்கென காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இது தொடர்பான கலந்துரையாடல் பூநகரி பிரதான கடற்படை தளத்தில் நடைபெற்றுமிருந்தது.



இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான தரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டுமிருந்தனர்.


இக்காணியை விடுவிப்பது தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளதாக கடற்படை தெரிவித்துவருகின்றது.இரணைதீவு பகுதி, தேசிய பாதுகாப்புக்கு முக்கிய ஒரு இடமாக இருப்பதாகவும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும் ராடர் கண்காணிப்பு நிலையங்கள் இருப்பதனால் இரணைத்தீவினுடைய வடக்குப் பகுதி முழுமையாகத் தேவையென்றும் கடற்படையினர் குறிப்பிட்டிருந்தனர்.



இதேவேளை அந்தப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றும் போது கடற்கரையோரப் பகுதிகளிலுள்ள கடல்வாழ் உயரினங்கள் அழிவடையும். அத்துடன், அங்கு குடிநீர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன என குடியேறுவதை தடுக்கும் வகையில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் சுமார் 1,100 பரப்பளவைக்கொண்ட இரணைத்தீவில் 186 ஏக்கரை மாத்திரம் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

No comments