மங்களவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!


கிளிநொச்சியில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று சந்தித்து கலந்துரையாடினார். வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்களுக்காக வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, நேற்றுக்காலை கிளிநொச்சிக்கும் பின்னர் முல்லைத்தீவுக்கும் சென்றிருந்தார். கிளிநொச்சியில் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, முல்லைத்தீவு செல்லும் போது, வழியில் காணாமல் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை வெளிப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தப்பட்டு வரும் இடத்துக்கு மங்கள சமரவீர, சென்றார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது அவர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்லுமாறும், உறவுகள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு காணாமல்போனோருக்கான பணியகத்தின் உதவியை நாடுமாறும் ஆலோசனை கூறினார். எனினும், இதற்கு முன்னர் பல தடவைகள் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அந்தக் கோரிக்கையை நிராகரித்தனர். தம்மை வந்து சந்தித்ததற்காக மங்கள சமரவீரவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். அதேவேளை, தமது வடக்கிற்கான பயணத்தின் போது நடந்த சந்திப்புகள் குறித்து உடனுக்குடன் கீச்சகத்தில் பதிவுகளையும் படங்களையும் இட்டு வரும் மங்கள சமரவீர, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்தது தொடர்பான எந்தப் படத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments