6ஆயிரம் தமிழ் சிறார்கள் இராணுவத்தினரிடம்!


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள சிவில் பாதுகாப்புப் பிரிவின் கீழுள்ள 294 இராணுவ முன்பள்ளிகளில் 6,020 குழந்தைகள் கல்வி கற்றுவருவதாக வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர்களிற்கு கற்பிக்க இராணுவ தொண்டர் படையின் கீழுள்ள 553 ஆசிரியர்களும் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


முன்னதாக குறித்த முன்பள்ளி ஆசிரியர்கள் மூன்று நாள் இராணுவப்பயிற்சி அமர்வுகளில் பங்கெடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பின் தொடர்ச்சியாக 21 நாட்களிற்கு முழுமையான இராணுவ பயிற்சி திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு தலைமைத்துவ பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.


தெற்கில் பியகொட மற்றும் தியத்தலாவ உள்ள  இராணுவ பயிற்சி மையங்களில் இராணுவ பயிற்சி நடத்தப்படுகிறது.இராணுவத்தால் இயக்கப்படும் பண்ணையில் பணியாற்றும் இளம் தலைமுறையினரை குறிவைக்கும் பயிற்சித் திட்டமே இதுவாகும்.


இதனிடையே பயிற்சிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் பலர் குழந்தைகளைக் கொண்டுள்ளனர், 21 நாட்களுக்கு அவர்கள் குடும்பத்தினரை பிரிந்திருப்பது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சபை மீண்டும் மீண்டும் இராணுவத்தால் நடத்தப்படும் முன்பள்ளிகளை கல்வி அமைச்சிற்கு ஒப்படைக்க கோரிவருகின்றது.


இது தொடர்பில் கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன், இராணுவ முன்பள்ளிகள் இராணுவ ரீதியிலான முன்னோடி செயற்பாடு எனவும் அதனை சிறுவயது சித்திரவதையின் ஒரு வடிவமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர் போராளிகள் பற்றி சர்வதேசம் இப்போதும் கதைத்துக்கொண்டு வன்னியில் இராணுவத்தால் நடத்தப்படும் முன்பள்ளிகளில் உள்ள சிறார்கள் பற்றி வாய்திறக்க மறுப்பது பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments