காவிரி போராட்டம்: சென்னை எழும்பூர் முதல் சேப்பாக்கம் வரை அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு


போராட்டக்குழுவினர் முற்றுகையிடலாம் என்பதால் சென்னை சேப்பாக்கம் பகுதி முழுவதும் காவல்துறை வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. போராட்டங்களை நீர்த்துப்போக செய்யும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்பது தமிழக போராட்டக்குழுவினரின் வாதம்.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை புறக்கணிப்போம் என்று கூறும் அதே வேளையில் கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்தனர்.
எதற்கும் செவி சாய்க்க மறுத்த கிரிக்கெட் சங்க நிர்வாகம், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்று கூறவே, பரபரப்பு பற்றிக்கொண்டது. கிரிக்கெட் போட்டியை நடத்த விட மாட்டோம் என்று பலரும் களமிறங்கவே, மைதானத்திற்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பை மீறி கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மட்டும் இன்றி அனைத்து சாலைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சி.எஸ்.கே அணி வீரர்கள் தங்கி உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு தீவிரபதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் தங்கியுள்ள எழும்பூர் ராடிசன் புளூ ஓட்டலுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமருக்கு இணையாக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலை, எழும்பூர், சேப்பாக்கம் சாலைகளில் கூட்டமாக நிற்கவோ, செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை சாலையும் காவல்துறையினரின் கட்டுப்பாடு காரணமாக வெறிச்சோடியுள்ளது. வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் தடுத்து நிறுத்தப்பட்டு பலத்த சோதனை, விசாரணைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு நிலவுகிறது. வரலாறு காணாத பாதுகாப்புடன் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

No comments