உருகுவேயில் திருத்தந்தை பதினான்காம் லியோவின் முதல் திருப்பலி: சுமார் 40,000 பேர் பங்கேற்பு
தென் அமெரிக்க நாடுகளுக்கான 12 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக உருகுவே சென்றுள்ள பாப்பாண்டவர் பதினான்காம் லியோவின் முதல் திருப்பலியில் சுமார் 40,000 பேர் கலந்துகொண்டுள்ளதாக வத்திக்கானும் அந்நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை காலை நடைபெற்ற இந்தத் திருப்பலியில், உருகுவே மற்றும் அண்டை நாடுகளான அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 30,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 10,000 பேர் கலந்துகொண்டதாக வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திருப்பலி, உருகுவேயின் தலைநகர் மான்டிவீடியோவிலிருந்து சுமார் 375 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பைசாண்டு நகரின் பாரிஸ் லண்டன் பூங்காவில் நடைபெற்றது.
உள்ளூர் விமான நிலையத்திலிருந்து நிகழ்விடத்திற்குச் சென்ற பாப்பாண்டவர் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அமெரிக்காவில் பிறந்தவரும், அமெரிக்கா, பெரு மற்றும் வத்திக்கான் குடியுரிமைகளைக் கொண்டவருமான 71 வயதான திருத்தந்தை பதினான்காம் லியோ, தென் அமெரிக்காவின் மதச்சார்பற்ற நாடுகளில் ஒன்றான உருகுவேயில் கத்தோலிக்கத் திருச்சபையின் மீதான மக்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கு இந்தப் பயணத்தைப் பயன்படுத்தி வருகிறார்.
சனிக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி, 1878ஆம் ஆண்டு பாப்பாண்டவர் பதின்மூன்றாம் லியோவால் உருகுவேயின் முதல் ஆயராக நியமிக்கப்பட்ட அருளாளர் ஜசிந்தோ வேராவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
முன்னதாக, ஆயர் ஜசிந்தோ வேரா கிராமப்புறங்களில் கால்நடையாகச் சென்று ஏழை மக்களுக்கு உதவியதையும், அவர் சந்தித்த மக்களிடம் கிறிஸ்துவின் அன்பையும் நன்மையையும் வெளிப்படுத்தியதையும் பாப்பாண்டவர் நினைவுகூர்ந்திருந்தார்.
இதற்கிடையில், போதைப்பொருள் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களையும் போதைக்கு அடிமையானவர்களையும் சந்திப்பதற்காக மான்டிவீடியோவின் சில பகுதிகளுக்கு பாப்பாண்டவர் பயணம் செய்யவுள்ளார். அங்கு போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களில் கத்தோலிக்கத் திருச்சபை மேற்கொண்டுவரும் பணிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும், மான்டிவீடியோவின் நூற்றாண்டு மைதானத்தில் நடைபெறவுள்ள பிரார்த்தனைக் கூட்டத்தில் சுமார் 60,000 இளம் விசுவாசிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது, மத அக்கறையின்மையைக் கைவிட்டு, கிறிஸ்துவின் போதனைகளையும் மனிதநேய விழுமியங்களையும் பின்பற்றுமாறு இளைஞர்களுக்கு பாப்பாண்டவர் அழைப்பு விடுக்கவுள்ளார்.
பாப்பாண்டவரின் ஈகை, அன்பு மற்றும் சகோதரத்துவம் தொடர்பான போதனைகள் மதநம்பிக்கை இல்லாத இளைஞர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாப்பாண்டவர் அர்ஜென்டினாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜாவியர் மிலேயைச் சந்திக்கவுள்ளார்.
போர்களை முடிவுக்குக் கொண்டுவருதல், குடியேற்றக் கொள்கைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக திருத்தந்தை முன்வைத்துவரும் கருத்துகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிலைப்பாடுகளுடன் முரண்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பும் அரசியல் மற்றும் மத ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றது.
பாப்பாண்டவரின் தென் அமெரிக்கப் பயணம் உருகுவே, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் மதம், சமூகநலம் மற்றும் உலக அமைதி தொடர்பான விவாதங்களுக்கு புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment