ஏமனில் வான்வழித் தாக்குதல்: 22 பேர் பலி, 30 பேர் காயம் – சவூதி அரேபியா மீது குற்றச்சாட்டு
ஏமன் தலைநகர் சனா அருகிலுள்ள அல்-ஷரியா கிராமத்தின் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புடைய சுகாதார அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த தாக்குதல்களை சவூதி அரேபியாவே நடத்தியதாக ஹூத்தி அமைப்பின் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனீஸ் அலாஸ்பாஹி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்குக் கருத்துத் தெரிவித்ததுடன், சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஹூத்தி அமைப்புடன் தொடர்புடைய அல்-மசிரா தொலைக்காட்சி, தாக்குதலுக்குப் பின்னர் சிதறிக் கிடந்த கட்டட இடிபாடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களின் காணொளிக் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது.
எனினும், இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக சவூதி அரேபியா தரப்பிலிருந்து உடனடியாக எந்தவொரு அதிகாரபூர்வக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
தாக்குதலுக்கான பொறுப்பு தொடர்பான தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Post a Comment