யாழில். கடந்த 6 மாதங்களில் 163 பாடசாலை இடைவிலகல்கள் ; 30 பிள்ளைகள் இன்னும் மீள் இணைக்கப்படவில்லை


யாழ் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில்163 பாடசாலை இடைவிலகல்கள் பதிவாகி இருந்ததாகவும், அதில் 133 பிள்ளைகளே மீள் இணைக்கப்பட்டுள்ளனர் எனவும் ஏனைய 30 பிள்ளைகள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

யாழ் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதைவஸ்து பாவனை காரணத்தால் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளது. அதனால் சில இடங்களில் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதத்துக்குள் 163 பாடசாலை இடைவிலகல்கள் பதிவாகி இருக்கின்றது.

அதில் 133 பிள்ளைகளை மீளிணைக்கப்பட்டனர். 30 பிள்ளைகளை மீள் இணைக்க முடியவில்லை. அந்தப் பிள்ளைகளுடைய குடும்பப் பின்னணி, பொருளாதாரப் பிரச்சினைகள், பாதுகாப்புச் சம்பந்தமான விடயங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் காரணங்களாக இருக்கலாம். இந்த 30 பிள்ளைகளையும் மீளிணைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதேபோலத்தான் சுமார் 200 வரையான சிறுவர் துஷ்பிரயோகங்களும் இந்த வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.  

சிறுவர் துஷ்பிரயோகங்கள் மாத்திரமல்லாமல், யுவதிகள் காணாமல் போதல், தற்கொலை போன்ற பல விடயங்களும் அதற்கான சமூகப் பின்னணி தொடர்பிலும் ஆராய வேண்டும்.

அதனால் சமூகச் சூழலில் இருக்கின்ற பிரச்சினைகள் என்ன என்பதை ஆராயுமாறு  சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் என்ற வகையில் அதிகாரிகளுக்கு வலியுறுத்திக் கூறியிருக்கின்றேன். 

முக்கியமாக நுண்கடன் வசதிகளைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் இவ்வாறான பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்க கூறியுள்ளேன் என தெரிவித்தார்

No comments