'நீதியே என் உரிமை': பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வடக்கில் 16 நாள் விழிப்புணர்வு பரப்புரை


பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் 16 நாள் சர்வதேச விழிப்புணர்வு இயக்க விழிப்புணர்வுச் செயற்பாடு நேற்றைய தினம் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இவ்விழிப்புணர்வு நடவடிக்கையில், 'நீதியே என் உரிமை' என்ற தொனிப்பொருளிலும், 'ஒன்றிணைவோம், பாதுகாப்போம், தடுப்போம்' என்ற மையக்கருத்துடனும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வின்போது, இவ்வியக்கத்தின் விழிப்புணர்வுச் செய்தி மற்றும் பரப்புரை பதாகை என்பன வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டு, அவரது முன்னிலையில் இந்த இயக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25ஆம் திகதி தொடங்கி, சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசெம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் இப் பரப்புரை முன்னெடுக்கப்படவுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், துன்புறுத்தல்கள் மற்றும் உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான அவசியம் தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.

வன்முறைக்கு எதிரான நடவடிக்கை என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவை வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. இத்தகைய வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், நீதியை உறுதிப்படுத்துவதற்கும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதையே 'நீதியே என் உரிமை – ஒன்றிணைவோம், பாதுகாப்போம், தடுப்போம்' என்ற இவ்வாண்டின் செய்தி வலியுறுத்துகின்றது. 

No comments