பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாக்க வலியுறுத்தல்: யாழ்ப்பாணத்தில் மீனவ சங்கங்கள் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானம்
வடக்கில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் , சட்டவிரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்தி ,பாரம்பரிய சிறுமீன்பிடி முறைமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு மகஜர் கையளித்து என மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளன.
மீனவ சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
அதன் போது, வடக்கு கடற்பரப்பில் நீண்டகாலமாக உள்ளூர் மீனவர்களினால் முன்னெடுக்கப்படும், சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை என்பவற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார்கள்
பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாத்தல், சட்டவிரோதமான மற்றும் ஒழுங்கற்ற முறையில் முன்னெடுக்கப்படும் அட்டைப் பண்ணைகள், டைனமைட் பயன்படுத்துதல், ஒளி பாய்ச்சி மீன்பிடித்தல், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் என்பவற்றை உடனடியாக கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
கலந்துரையாடலின் இறுதியில், குறித்த மீன்பிடி முறைகளை முழுமையாக கட்டுப்படுத்தி, பாரம்பரிய மீன்பிடி முறைமைகளை ஊக்குவித்து , மீன் வளங்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட கடற்றொழில் திணைக்களிடம் கோரி , அவர்களுக்கு மகஜர் அனுப்பி வைப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

Post a Comment