ஏர் பிரான்ஸ், கேஎல்எம் நிறுவனங்களுக்கு 425,000 டொலர் அபராதம்
ஈராக் வான்வெளியில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச உயரத்திற்குக் கீழே டஜன் கணக்கான விமானங்களை இயக்கியமைக்காக, ஏர் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் (KLM) விமான நிறுவனங்களுக்கு மொத்தம் 425,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படுவதாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தடை விதித்த ஈராக் வான்வெளிப் பகுதிகளில், 32,000 அடிக்கும் குறைவான உயரத்தில் விமானங்களை இயக்கியதாக இரு நிறுவனங்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, ஏர் பிரான்ஸ் நிறுவனம் 30க்கும் மேற்பட்ட விமானங்களையும், கேஎல்எம் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட விமானங்களையும் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் குறியீட்டைப் பயன்படுத்தி இயக்கியதாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மோதல்கள், பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அதிகரித்துவரும் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்துக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடிய வெளிநாட்டு வான்வெளிப் பகுதிகளில் அமெரிக்க விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்குவதை FAA தடைசெய்கிறது. அமெரிக்க விமான நிறுவனங்களின் குறியீட்டைப் பயன்படுத்தி விமானங்களை இயக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் இத்தடைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.
அபராதத் தொகையில் 265,000 அமெரிக்க டொலர்களை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும், ஓராண்டுக்குள் மீண்டும் விதிமீறல்கள் இடம்பெற்றால் எஞ்சிய தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்கப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏர் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் நிறுவனங்கள், ஒழுங்குமுறைத் தேவைகளை முழுமையாகப் பின்பற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கருதுவதாகவும் அமெரிக்கப் போக்குவரத்துத் துறையிடம் தெரிவித்துள்ளன.
உள்ளூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் விமானங்களைத் தாழ்வாகப் பறக்குமாறு அறிவுறுத்தியதாகவோ அல்லது உயரத்தை அதிகரிக்க அனுமதி மறுத்ததாகவோ இரு நிறுவனங்களும் விளக்கமளித்துள்ளன. மேலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை மறுப்பதால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட விமானங்கள் அவசரகாலச் சூழ்நிலைகளுக்கான விதிவிலக்கின் கீழ் கருதப்பட வேண்டும் எனவும் அவை தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளது.

Post a Comment