பிரான்ஸை உலுக்கிய போராட்டங்களை அடக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மக்ரோன் உறுதி


பிரான்ஸில் அண்மைய வாரங்களில் தீவிரமடைந்த வன்முறைப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அதேவேளை, மாணவர்களின் கோரிக்கைகளில் நியாயமான அம்சங்கள் இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தெற்கு பிரான்ஸின் மார்சேய் நகரில் திங்களன்று உரையாற்றிய மக்ரோன், வரும் சனிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள புதிய ஆர்ப்பாட்டங்கள் ஆபத்தானவையாக அமையக்கூடும் என எச்சரித்தார். பொது ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், போராட்டப் பேரணிகள் நகர மையங்களுக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 31ஆம் தேதி ஹாலோவீன் கொண்டாட்டங்களின்போது மேலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழக்கூடும் என உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய போராட்டங்கள் பல முக்கிய நகரங்களில் வன்முறை, கொள்ளை மற்றும் மோதல்களாக மாறியமை பிரெஞ்சு அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. போராட்டங்களின் தீவிரத்தையும், தீவிர இடதுசாரிக் குழுக்களின் நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படைகள் ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டதாக மக்ரோன் ஒப்புக்கொண்டார். அதேவேளை, சில நகரங்களில் தீவிர வலதுசாரி மற்றும் தேசியவாதக் குழுக்களும் இடதுசாரி ஆர்வலர்களுக்கு எதிராகத் திரண்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

போராட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் வன்முறையைத் தூண்டுவதிலும் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக மக்ரோன் குற்றஞ்சாட்டினார். குற்றச் செயல்கள் நடைபெறும் இடங்களுக்கு மக்களைத் திரட்டுவதன் மூலம் சமூக ஊடகங்கள் ஜனநாயக அமைப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின்போது நாடு முழுவதும் சுமார் 70,000 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், 1,435 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஓரளவு அமைதி நிலைநாட்டப்பட்டதாகவும் மக்ரோன் குறிப்பிட்டார்.

எனினும், போராட்டங்களை அடக்குவது மட்டுமே அரசாங்கத்தின் நோக்கமல்ல என அவர் வலியுறுத்தினார். பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தலைமையிலான அரசாங்கம், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டும் எனத் தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், கல்வி மற்றும் பல்கலைக்கழகச் சேர்க்கை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல முக்கிய நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, மாணவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் அமைதி நிலவுவது அவசியம் என அரசாங்கப் பேச்சாளர் மௌட் பிரெஜியன் தெரிவித்துள்ளார்.

No comments