திருச்சியில் தண்டனை முடிந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நபர் - பிணையில் செல்ல அனுமதித்த மல்லாகம் நீதிமன்று




தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் கைதான நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்று சொந்த பிணையில் செல்வதற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை அனுமதித்துள்ளது 

யாழ்ப்பாணம் - மாசியப்பிட்டி, பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது 50) எனும் நபர் சட்டவிரோதமான முறையில் தமிழ் நாட்டுக்கு சென்று அங்கு திருச்சியில் தங்கியிருந்த நிலையில்,2015ஆம் ஆண்டு கால பகுதியில் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்டு , வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வந்த நிலையில் 2018ஆம் திகதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் , 45 ஆயிரம் இந்திய ரூபாய் தண்டப்பணம் செலுத்தவும் நீதிமன்று உத்தரவிட்டது. 

குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்ததை அடுத்து , அவரது 10 ஆண்டு சிறை தண்டனை காலம் 07 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் கடந்த 2025ஆம் ஆண்டுடன் அவரது சிறைத்தண்டனை காலம் நிறைவுற்றதை அடுத்து , இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்குடன் , திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் 

அந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு கடத்தப்பட்ட நிலையில் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் , கைது செய்யப்பட்டு , அன்றைய தினமே பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார் 

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , 72 மணி நேர தடுப்புக்காவல் அனுமதியினை பெற்று , அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர் 

அதனை தொடர்ந்து இன்றைய தினம் வியாழக்கிழமை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து , மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து அவரை சொந்த பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.

No comments