திஸ்ஸ விகாரைப்பகுதியில் புதிய சட்டமாம்!
தொடர்ந்தும் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படும் திஸ்ஸ விகாரைப்பகுதிக்கு செல்ல வலிகாமம் பிரதேசசபை தவிசாளரிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தையிட்டியில் மீண்டும் சட்டவிரோத கட்டுமானப் பணிகள முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் அதனை பார்வையிடச் சென்ற வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை இலங்கை காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை வளாகத்தில் மேலும் புதிய சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அப்பகுதியை நேரில் பார்வையிடச் சென்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களைக் காவற்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் விகாரை அமைந்துள்ள பகுதிக்கு நிலைமையை நேரில் ஆராய்வதற்காகச் சென்றனர். எனினும், விகாரையின் நுழைவாயிலில் பாதுகாப்பு மற்றும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர், தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்களை வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்காது தடுத்து நிறுத்தினர்.
காவற்துறையினரின் தடையைத் தொடர்ந்து, விகாரையின் நுழைவாயிலுக்கு வெளியே நின்றவாறே, பிரதேச சபையின் அனுமதியின்றித் தனியார் காணிகளில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய கட்டுமானப் பணிகளைத் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பார்வையிட்டுத் திரும்பினர்.
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீகத் தனியார் காணிகளை உள்ளடக்கிய பகுதியில், பிரதேச சபையின் அனுமதி இன்றியும் காணி உரிமையாளர்களின் சம்மதமின்றியும் 'திஸ்ஸ விகாரை' என்ற பெயரில் பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டமைக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment