மீண்டும் ஒரு கட்சி ஆட்சி முறையா?
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டில் ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டுவருவதற்கான மறைமுக முயற்சியாக கருதப்படுகிறது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டுவரப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஜனநாயகப் போராட்டங்களை முற்றிலுமாக ஒடுக்கும் நோக்கம்கொண்டது.
நாட்டில் ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டுவருவதற்கான மறைமுக முயற்சியாகக் கருதப்படும் இச்சட்டத்தை, சர்வதேச சமூகமும் உள்ளூர் தரப்புகளும் ஏற்கனவே நிராகரித்துள்ள நிலையில், அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
வெடுக்குநாறிமலையில் புத்தர்சிலை வைப்பு, யாழ்ப்பாணத்தில் திலீபன் சிலை மற்றும் செம்மணி புதைகுழிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் மூலம் மக்களின் உண்மையான கோரிக்கைகள் திசைதிருப்பப்படுகின்றன.
தற்போதைய ஆட்சியின் இரண்டு வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
இதனைக் கண்டித்து சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணப் பகுதிகள் உட்பட ஏனைய மாவட்டங்களிலும் தொடர்ச்சியான கண்டனப் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

Post a Comment