சீரற்ற காலநிலை:மன்னாரில் பாதிப்பு!
வட மாகாணத்தில் நிலவி வரும் தீவிர சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் இடி மின்னல் தாக்கங்களினால் 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் பாதிக்கப்பட்டுத் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, நாளைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில்; மழை நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடற்றொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் தகவல்களின் படி மாந்தை மேற்கு கூறாய் கிராமத்தைச் சேர்ந்த 29 குடும்பங்களும், சீது விநாயகர் குளம் கிராமத்தைச் சேர்ந்த 21 குடும்பங்களும் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்விரு கிராமங்களுக்குமான பிரதான போக்குவரத்துப் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், கிராமங்களுக்குள் பாரிய அளவில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, இலுப்பைக் கடவை பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீவிர இடி மின்னல் தாக்கத்தினால் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 4 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்குரிய துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment