பலாலி நிலமீட்பு போராட்டத்தில் மயங்கிய பெண்


இராணுவம் கையகப்படுத்திவைத்துள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் நிலமீட்பு போராட்டம் இன்று 17 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.

பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன வருகின்றனர்.

நீண்டகாலமாக தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தையும் பூர்வீக உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பலாலி பகுதியை சேர்ந்த மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் தமது  காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  17ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர். 

அதன் போது, எமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து  கடந்த 36 வருடங்களாக வேறு இடங்களில் வசித்து வருகிறோம். யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் எம்மை எமது சொந்த இடங்களில்  இன்னமும் மீள் குடியேற்றவில்லை. 

எங்கள் இறப்பாவது எங்கள் சொந்த மண்ணில் நிகழ  வேண்டும் என்பதே எமது இறுதி ஆசையாகவுள்ளது என அங்கிருந்த முதிவர் ஒருவர் தெரிவித்தார். 

இதேவேளை கடும் வெய்யிலின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டமையால் , பெண்ணொருவர் மயங்கிய நிலையில் , போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏனையோர் உரிய முதலுதவியை செய்து நிழலில் அவரை இருத்தியிருந்த நிலையிலும் , போராட்டத்திற்கு ஆதரவாக அவ்விடத்தில் போராட்டம் முடிவையும் வரையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments