அமெரிக்கா மின்னியாபோலிஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேக நபர் உட்பட 3 பேர் பலி!
நேற்றுப் புதன்கிழமை மதியம் மினியாபோலிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், சந்தேக நபரும் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்று மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் என்று சார்ஜென்ட் காரெட் பார்டன் புதன்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இரண்டு அதிகாரிகள் துப்பாக்கிக் காயங்களுக்கு உள்ளாயினர். காயமடைந்த மூவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் ஹென்னெபின் கவுண்டி மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்று பார்டன் கூறினார்.
உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு (21:30 GMT) சற்றுப் பின்னர் மினியாபோலிஸ் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், பொதுமக்கள் அப்பகுதியை விட்டு விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டது. காயமடைந்தவர்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழு நோயாளிகள் ஹென்னெபின் ஹெல்த்கேர் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ விசாரித்து வருவதாகவும், "உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் வழங்கும்" என்றும் இயக்குநர் காஷ் படேல், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக மேலதிகத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் குறித்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட காணொளியில், மினியாபோலிஸ் மாநாட்டு மையத்திற்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை நோக்கி காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிகளைச் சுட்டுவது காட்டப்பட்டது. மேலும், அதிக மக்கள் அடர்த்தி கொண்ட லோரிங் பார்க் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரித்தனர்.

Post a Comment