22வது அரசியல் சட்டத்திருத்தம்: சிதறாத அநுர அணியின் 158! வீதியில் தனித்துவிடப்பட்ட சஜித்! பனங்காட்டான்


நெவில் சமரக்கூனை பின்கதவால் பிரதம நீதியரசராக நியமித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், ஷிரானி பண்டாரநாயக்கவை தமது தேவைகலந்த விருப்புக்காக பிரதம நீதியரசராக நியமித்த மகிந்த ராஜபக்சவும் அவர்களை பதவி நீக்கம் செய்யும் இம்பீச்மென்ற் பிரேரணையை தாங்களே முன்னெடுத்தது அண்மைக்கால வரலாறு. ஒழுங்கீன நீதிச்சேவையை நிகழ்த்திய அந்த அரசியல் வம்சத்தில் வந்தவர்கள், நீதியரசர்களின் வயதெல்லையை அதிகரிக்கும் சட்டத்திருத்தத்தை எதிர்த்துக் கோஷமிட்டது அவர்களது முன்னோர்களின் வரலாற்றை மறைக்க முனைந்த ஒரு கூத்து.

ஏதிர்க்கட்சிகள், வழக்கறிஞர் அமைப்புகள் உட்பட பல பொது அமைப்புகளுமாக சுமார் 60க்கும் மேலான எதிர்ப்பு மனுக்களை உட்படுத்திய 22வது அரசியல் திருத்தம் நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அநுர குமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் 158 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக இதனை ஆதரித்து வாக்களித்தனர். ஆளும் தரப்புக்குள் பிளவு இருப்பதாகவும், இவர்களுள் சிலர் நாமல் ராஜபக்சவுடன் இணைந்து கூட்டாக படம் எடுத்ததாகவும் பரபரப்பான செய்திகள் வெளிவந்து மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியதாயினும் வாக்கெடுப்பில் எல்லாமே பிசுபிசுத்துப் போனது. 

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடந்த தேர்தலில் 159 பேர் தெரிவாகினர். இவர்களுள் சபாநாயகரை தவிர்த்துப்பார்க்கில் மிகுதி 158. இந்த 158 எண்ணிக்கை 24ம் திகதி அரசியல் திருத்தச்சட்ட வாக்களிப்பின்போது நிரூபிக்கப்படுமென்று பிரதமர் ஹரிணி அமரசூரிய சவால் பாணியில் கூறியது அவ்வாறே நிறைவேறியுள்ளது. இதனை எதிர்த்தவர்கள் 63 பேர். இவர்களில் 40 பேர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள். மிகுதி 23க்குள் தமிழரசுக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியை உட்படுத்திய ஜனநாயக முன்னணி என்பவை அடக்கம். 

இத்திருத்தச் சட்டத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லையென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் தமக்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இதனை நிறைவேற்றுவது ஆட்சித்தரப்புக்கு சுலபமாகி விட்டது. உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு இச்சட்டத் திருத்தம் இடமளிக்கிறது. பிரதம நீதியரசராக பதவி வகிப்பவர் 67 வயதை பூர்த்தி செய்யும்போது அல்லது ஆறு வருட சேவையை நிறைவு செய்யும்போது - இதில் எது முதலாவதாக வருகிறதோ அப்போது அவர் ஓய்வு பெறவேண்டும். 

பல வருடங்களாக தேக்கநிலையிலுள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவும், அனுபவமுள்ள நீதிபதிகளின் சேவையை பெறவுமே இச்சட்டத் திருத்தம் அவசியமானது என்பது ஆட்சித்தரப்பினரின் வாதம். தங்களுக்குத் தேவையான நீதிபதிகளை தொடர்ந்து சேவையில் வைத்திருந்து தேர்தல்களற்ற ஒற்றையாட்சி முறையை தொடர்வதற்காகவே இ;த்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதென்பது எதிர்த்தரப்பினரின் பதில் வாதம். இதில் எது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை தெரிந்து கொள்ள சில வருடங்கள் காத்திருக்க வேண்டும். 

நீதிமன்றம் தீர்ப்பளித்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென அநுர தரப்பு மீண்டும் மீண்டும் கூறி வந்தது. அவ்வாறான தீர்ப்பு தங்களுக்கு வழங்கப்படுமென்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கின்றதென்று இந்த மாதம் 6ம் திகதி இந்தப் பத்தியில் நான் கூறியிருந்தேன். அதனை உயர் நீதிமன்ற தீர்ப்பு உண்மையாக்கியுள்ளது. இதனால் எந்தப் பிரச்சனையுமின்றி திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது ஆட்சியினருக்கு இலகுவாயிற்று. 

இதனை எழுதும்போது கடந்த நாற்பது ஆண்டுகளுக்குள் ஆட்சியிலிருந்தவர்கள் நீதிபரிபாலன சபையையும், பிரதம நீதியரசர்களையும் எவ்வாறு தம்மி~;டப்படி ஆட்டிப்படைத்தார்கள் என்பதை ஒரு தடவை மீள்நினைவுக்கு உட்படுத்த வேண்டும். 

1977 தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன

1978ம் ஆண்டு ஜனாதிபதியாக தம்மைத்தாமே நியமித்துக் கொண்டார். தமது தனிப்பட்ட சட்டத்தரணியான நெவில் சமரக்கூனை பிரதம நீதியரசராக நியமித்து அவரது முன்னிலையில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்தார். நெவில் சமரக்கூன்; ஒருபோதும் மாநகர நீதிபதியாகக்கூட பதவி வகிக்காதவர். 1984ம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பில் ராஜா சின்னத்துரை என்ற பெயர் கொண்ட தனியார் கல்விக்கூடம் ஒன்றின் நிகழ்வில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நடவடிக்கைகளை இவர் விமர்சனம் செய்தது பாரதூரமான விடயமாக மாறியது. இதனால் அவரை பதவி நீக்கும் (இம்பீச்மென்ற்) பிரேரணையை ஜெயவர்த்தன முன்னெடுத்தார். நெவில் சமரக்கூன் தமது பிரதம நீதியரசர் பதவியை திடுதிப்பென ராஜினாமா செய்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு ஓடிவிட்டார். 

மூன்றாண்டுகள் மட்டுமே ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் மாவட்ட நீதிபதி ஒருவரின் இல்லம் இனம் தெரியாதவர்களால் தாக்குதலுக்குள்ளானது. அந்த நீதிபதி தமக்கு பாதுகாப்பு கேட்டு காவற்துறை உயர்பீடத்தைக் கேட்டபோதும் அது கிடைக்கவில்லை. ஜனாதிபதி பிரேமதாச நீதிமன்ற வழக்கொன்றில் தமக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு அந்த மாவட்ட நீதிபதியிடம் கேட்டபோது அது மறுக்கப்பட்டதன் எதிரொலியே அவரது இல்லம் தாக்கப்பட்டதற்கான காரணமென நாடாளுமன்றத்தில் பலர்  குற்றஞ்சாட்டியிருந்தனர். 

இலங்கையின் 43வது பிரதம நீதியரசராக 2011 மே மாதம் பதவியேற்றவர் ~pரானி பண்டாரநாயக்க (இவர் சிறிமாவோ பண்டாரநாயக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல). இவரை இப்பதவிக்கு பலரது எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமது சொந்த விருப்பத்துக நியமித்தவர் அப்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச. 2012ம் ஆண்டில் டிவி நெகும என்ற காணிச்சட்டத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்ற மகிந்த விரும்பினார். அதற்கு ஒன்பது மாகாண சபைகளும் சம்மதமளிக்க வேண்டும். அப்போது வடமாகாண சபை இயங்கவில்லை. அதன் ஆளுனராகவிருந்த முன்னாள் ராணுவத்தளபதி சந்திரசிறி ஒப்பமிட்டது சட்டத்துக்கு முரணானது என தமிழரசுக் கட்சி எம்.பி. மாவை சேனாதிராஜா தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பிரதம நீதியரசர் ~pரானி பண்டாரநாயக்க தலைமையிலான நீதியரசர்கள் குழாம் இந்த மனுவுக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால் மகிந்த ராஜபக்சவின் விருப்பம் நிறைவேறவில்லை. இதன் எதிர்விளைவாக ~pரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவி நீக்கும் இம்பீச்மென்ற் பிரேரணை கொண்டு வரப்பட்டு 2013 ஜனவரியில் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 

அவ்வேளை சட்டமா அதிபராகவிருந்த மொஹான் பீரிசை பிரதம நீதியரசராக்கி தமது விருப்புகளை எந்தப் பிரச்சனையுமின்றி மகிந்த நிறைவேற்றிக் கொண்டார். அடுத்து ஜனாதிபதியாக வந்த மைத்திரிபால சிறிசேன 2015 ஜனவரியில் தமக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி ~pரானி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசராக நியமித்தார். ஒரு நாள் மட்டும் அப்பதவியை வகித்த அவர் மறுநாள் ஓய்வு பெற்று சென்றுவிட்டார். 

இ;ப்பதவியை மீண்டும் தமக்குத் தந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தாம் பணியாற்ற தயார் என்று மொஹான் பீரிஸ் தெரிவித்திருந்தாராயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை மகிந்தவின் ஆளாகக் கருதி அப்பதவிக்கு நியமிக்கவில்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில் பிரதம நீதியரசராக பதவி வகித்த சரத் என்.சில்வாவின் தனிப்பட்ட வாழ்க்கை, சில வழக்குகளில் அரசியல் சாயம் கலந்து அவர் வழங்கிய தீர்ப்புகள். முன்னுக்குப் பின் முரணாக தொழில் முறைமையில் அவர் கடைப்பிடித்த நடைமுறை என்பவை அவ்வேளையில் ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் பொதுவெளிகளிலும் தாராளமாக விமர்சிக்கப்பட்டது. 

கடந்த சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளாக இலங்கையின் நீதித்துறையும், நீதிபரிபாலன சேவையும், அரசியலும் எவ்வாறு இரண்டறக் கலந்து ஒழுங்கீனமாக, சட்டத்துக்குப் புறம்பாக இயங்கின என்பதற்கான ஒரு குறுக்குவெட்டுப் பார்வையை மேலே சுட்டிக்காட்டப்பட்ட சம்பவங்கள் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன. அரசியல் யாப்பில் எந்த மாற்றங்களையோ திருத்தங்களையோ மேற்கொள்ளாது ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் தங்கள் அரசியல் செல்நெறியில் எவ்வாறு செயற்பட்டனர் என்பதை இதனூடாக அறிந்து கொள்ளலாம். 

இப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 22வது அரசியல் திருத்தம் இவ்வாறான செயற்பாடுகளுக்கானதல்ல. நீதியரசர்களின் வயதெல்லையை கூட்டுவதோடு வேறு சில அம்சங்களையும் உள்ளடக்கியது. இதனை ஜனாதிபதி அநுர குமரவும் நீதியமைச்சர் ஹர்ச நாணயக்காரவும் மற்றும் பல அமைச்சர்களும் பல தடவை தெரிவித்துள்ளனர் (இவ்வாறு உறுதிபடக் கூறியதால் அவ்வாறுதான் சகலதும்  இடம்பெறுமென்று அரசியலில் எவராலும் உறுதிகூற முடியாது). முறைப்படி அரசியல் சட்டத்திருத்தத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, எதிர்மனுக்களை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்புக்கு இணங்க, சிறப்புப் பெரும்பான்மையுடன் இச்சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெளிப்பார்வைக்கு ஜனநாயக விழுமியம் நேர்த்தியாகக் கடைப்பிடிக்கப்பட்டதாக இதனைச் சொல்லலாம். 

ஆனால் கடந்த நாலரை தசாப்தத்தில் நீதித்துறையையும், நீதிபரிபாலனத்தையும், பிரதம நீதியரசர் நியமனத்தையும் தங்களின் சுயவிருப்பத்துக்கு இணங்க நடைமுறைப்படுத்திய, ஒழுங்கற்ற அரசியல் வம்சத்தில் வந்தவர்கள், 22வது அரசியல் திருத்தத்தை எதிர்த்தது வேடிக்கையானது. இது பொதுமக்களின் ஞாபகசக்தியை சோதிப்பதாகவும் அமைந்திருந்தது. 

இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்க உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்து பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தார் சஜித் பிரேமதா. ஆனால் அவர் எதிர்பார்த்த எவரும் அதில் பங்குபற்றாது அவர் தனித்து வீதியில் விடப்பட்டது, அவரது அரசியல் வங்குரோத்துக்கு அவரே வழிவகுத்ததுபோல் காட்சி கொடுத்துள்ளது. 

No comments