RAF ஃபேர்ஃபோர்டு அருகே பயங்கரவாத சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 5 பேர் பிணையில் விடுவிப்பு
குளோசெஸ்டர்ஷையரில் உள்ள RAF ஃபேர்ஃபோர்டு விமானப்படைத் தளத்திற்கு அருகே பயங்கரவாதக் குற்றங்களுக்குத் தயாரானதாகச் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஐந்து பேர், கடுமையான நிபந்தனைகளுடன் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விமானப்படைத் தளத்திற்கு அருகே மூன்று சந்தேகத்திற்கிடமான வெள்ளை வேன்கள் காணப்பட்டதாக 999 அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள வீடுகள் சிலவற்றிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
லண்டனைச் சேர்ந்த 23 முதல் 25 வயதுக்குட்பட்ட ஐந்து பிரிட்டிஷ் ஆண்கள் முதலில் வெடிபொருள் சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். பின்னர், பயங்கரவாதச் செயலுக்குத் தயாரானதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத எதிர்ப்புப் காவல்துறையினரின், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான பிணை நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்களின் நடமாட்டம் மற்றும் பிற நபர்களுடனான தொடர்புகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் பினாமி நபர்கள் அல்லது வெளிநாட்டு அரசின் சார்பில் செயல்படும் நபர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பதும் விசாரணையின் ஒரு பகுதியாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வாகனங்களை முதலில் கவனித்த விவசாயி ஒருவர், முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்த பல ஆண்கள் தன்னைப் பார்த்ததும் வயல்வெளி மற்றும் அருகிலுள்ள கெம்ப்ஸ்போர்டு கிராமம் நோக்கி ஓடியதாகக் கூறியுள்ளார்.
அவர் அதிகாலை 01:36 மணியளவில் 999-க்கு அழைத்ததாகவும், அதன் பின்னர் சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் ஆயுதமேந்திய காவல்துறையினர் குவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை அவர்கள் மீது கூறப்படும் சந்தேகங்களை குற்றமாகக் கருத முடியாது.

Post a Comment