10 நாட்களுக்குப் பின்னர் நேபாளப் பெண் உயிருடன் மீட்கப்பட்டார்!!


10 நாட்களுக்கு முன்பு நேபாளத்தைத் தாக்கிய பெரும் வெள்ளத்தில், அடர்த்தியான சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து கிடந்த நேபாளப் பெண் ஒருவரை மீட்புக் குழுவினர் இன்று சனிக்கிழமை அவரது வீட்டிலிருந்து உயிருடன் மீட்டனர்.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள அப்பர் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் உயிருடன் மீட்கப்பட்ட சீன நாட்டவர் ஒருவரை மீட்டதாக அவசரகாலப் பணியாளர்கள் முன்னதாகத் தெரிவித்தனர்.

நுவாகோட் மாவட்டத்தில் புதைந்து கிடந்த தனது வீட்டிலிருந்து, சேறு படிந்திருந்த 64 வயதான சந்திரிகா ஸ்ரேஸ்தா மீட்கப்பட்டபோது, ​​நேபாள ஆயுதக் காவல் படையினர் ஆரவாரம் செய்தனர்.

அப்பகுதியைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு காவல்துறைக் குழு அவரைக் கண்டறிந்தது. சிகிச்சைக்காக அவர் காத்மாண்டுவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் இக்பால் ஹவாரி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

நேபாள ஆயுதக் காவல் படையால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், அவரது வீட்டின் ஒரு பகுதி மட்டுமே தெரிந்ததுடன், அதன் கீழ் தளங்கள் அடர்த்தியான சேற்றால் முழுவதுமாக மூழ்கியிருந்தன.

ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை சரிவைத் தொடர்ந்து, சுனாமி போன்ற நீர் மற்றும் மண் சுவர் சீனா-நேபாள எல்லையைத் தாக்கியது முதல், அவசரகால மீட்புக் குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அயராது உழைத்து வருகின்றன.

தேசிய பேரிடர் முகமையின்படி, நேபாளத்தில் இதுவரை 1,344 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 5,000 பேர் காணாமல் போயுள்ளனர்.

சீனாவில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 531 பேரைக் காணவில்லை என்றும் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,375 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 5,500க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 

No comments