தாயமெங்கும் நினைவேந்தல் உரிமை கோரி போராட்டம்!



யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் இன்று(28) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடிக்கு முன்பு கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபிக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் சம நேரத்தில் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை இலங்கை காவல்துறையினால் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments