கோட்டைக்கல்லாறில் கோர விபத்து: 17 வயது சிறுவன் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!


களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியைக் கடப்பதற்காக வீதியோரத்தில் நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சிறுவன் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.

கோட்டைக்கல்லாறைச் சேர்ந்த ஜெகநாதன் கிஷோர் (வயது 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தினமான நேற்று இரவு 9.30 மணியளவில், குறித்த பகுதியில் வீதியைக் கடப்பதற்காக மூன்று சிறுவர்கள் வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்தனர்.

இதன்போது வீதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொருவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாகக் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடிப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments