செம்மணிக்கு நீதி கோரி தொடரும் போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் "நீதியின் ஓலம் இரண்டு" கவனயீர்ப்புப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
தாயகச் செயலணியின் ஒருங்கிணைப்பில் செம்மணிச் சந்திக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், இரவு பகலாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்களுக்கு இதுவரை எவ்வித உள்நாட்டுப் பொறிமுறையினாலும் நீதி கிடைக்கவில்லை என்பதை போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சர்வதேச விசாரணைக்கான அழுத்தம்: இலங்கையின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் நேரடிக் கண்காணிப்பிலான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையே உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தின் இறுதி நாளான நாளை திங்கட்கிழமை (17ஆம் திகதி) காலை 10:30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் இருந்து மாபெரும் நீதி கோரும் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
ஐ.நா. பிரதிநிதியிடம் மகஜர்: இந்தப் பேரணி யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் துணை அலுவலகத்தைச் சென்றடைந்து, அங்குள்ள அதிகாரிகளிடம் சர்வதேச விசாரணையை உடனடியாக முன்னெடுக்குமாறு கோரும் முக்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.

Post a Comment