கொழும்பில் போராட அழைக்கிறார் சாணக்கியன்!

 


இலங்கைப்படைகள் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொடர் போராட்டத்தை முன்னெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

வலி. வடக்கில் இடம்பெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் பங்கெடுத்திருந்த அவர் பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் நிலங்களில் படையினர் விவசாயம் மற்றும் உணவகங்களை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சர்வதேச தூதுவர்கள் மற்றும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொழும்பில் "அரகலய" பாணியில் மயிலிட்டி, பலாலி, வசாவிளான், கேப்பாபிலவு, மயிலத்தமடு போன்ற பகுதிகளுக்கு தனித்தனியாக கூடாரங்கள் அமைத்து காணி விடுவிப்பை மட்டுமே முதன்மை கோரிக்கையாக வைத்துப் போராட வேண்டும் எனவும் தெரிவித்தார்..

அதேவேளை, ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலிருந்தே காணி விடுவிப்பு நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார் எனவும், தற்போதும் அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கோரி தாமதிப்பது பொருத்தமற்றது.2013ஆம் ஆண்டு வலி. வடக்கில் சுமார் 6,000 ஏக்கர் காணிகள் வர்த்தமானி மூலம் சுவீகரிக்கப்பட்ட நிலையில், பின்னர் 3,000 ஏக்கர் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், வர்த்தமானி மீளப் பெறப்படாததால் அவை சட்டரீதியான விடுவிப்பாக அமையவில்லை.

உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்படாமையே காரணம்.

எனவே, வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக மீளப் பெற்று, மக்களின் பூர்வீக நிலங்களை ஆவண ரீதியாக சட்டபூர்வமாக கையளிக்க வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சி ஆளுகையின் கீழுள்ள பிரதேசசபை நிகழ்வொன்றிற்காக வருகை தந்திருந்த போதே போராட்ட களத்திற்கு அவர்கள் சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.


No comments