நீதியின் ஓலம்! நீண்டு செல்கின்றது?
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் இரண்டாம் கட்ட போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து இன்று காலை ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி சென்றடைந்தது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் வழங்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டது.
பல நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டம், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் வலுவாக வெளிப்படுத்திய நிலையில் இன்று நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் கடந்த 4 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் போராட்டத்தின் இறுதி நாளான இன்று (17) யாழில் மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பேரணியில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது “இலங்கை அரசு தமிழ் குழந்தைகளை அவர்களின் கனவுகளுடன் புதைத்தமைக்கு சர்வதேச நீதி வேண்டும்“, “புதைக்கப்பட்டவர்கள் மறக்கப்பட்டவர்கள் அல்ல அவர்களுக்கு நீதி வேண்டும்.” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான நீதியைக் கோரியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் நீதியின் ஓலம் - 2' எனும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான போராட்டம் இன்று (17) வரை நான்கு நாட்களாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment