பின்கதவால் வந்து திரும்பிய அமைச்சர்!
ஊடக படுகொலைகளிற்கு நீதி கோரி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் பின்கதவு ஊடக பிரதி அமைச்சர் மாவட்ட செயலகத்தினுள் வருகை தந்திருந்ததாக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவின் பங்கேற்புடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியே யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி பல்வேறு கோசங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் பின்கதவு நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றார் என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment