மூன்று நாட்களில் 5 கோடி இழப்பு!
காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி நடவடிக்கைகளால்;, கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில் தீவகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்;டப்பட்டுள்ளது.
இந்திய அத்துமீறலை கண்;டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் கடலில் இறங்கி கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று புதன்கிழமை படகுகளில் கடலுக்குள் இறங்கிச் சென்ற உள்ளுர் கடற்றொழிலாளர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் இலங்கை ஜனாதிபதிக்கு கோரி கோரிக்கை மனுவையும் கையளித்துள்ளனர்.
இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைதீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய கடற்றொழிலாளர் அரசின் உடனடி தலையீட்டை கோருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து அடிமடி இழுவை மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன, இது வெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப் பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து கடல் உயிரினப் பல்வகைமையையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கின்றது.
இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. வடக்கின் பாரம்பரிய கடல்சார் வாழ்க்கை மரபு அழிந்துவிட்டால் அது வடக்கு மக்களுக்கு மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமையும்.
அதேவேளை எங்களது போராட்டம் எந்தவொரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதல்ல பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளை பாதுகாக்க வேண்டும், கடல் உயிரினப் பல்வகைமை, மீன்வளம் மற்றும் நீலப் பொருளாதாரத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டும், வடக்கு மக்களுக்கும் நாட்டின் ஏனைய மக்களைப் போன்று சமமான சட்டப் பாதுகாப்பும் அரசின் கவனமும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment