யாழ்ப்பாணம் வழுக்கையாற்றுப் வழி பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாருவதற்கு நடவடிக்கை


யாழ்ப்பாணம், வழுக்கையாற்றுப் வழி பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாருவதற்கும், அந்தச் செயற்பாடுகளைச் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக முன்னெடுப்பதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குளங்களைத் தூர்வாருவது தொடர்பான இந்த விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன் போது, கடந்த ஆண்டு கந்தரோடைக் குளத்தில் முன்னெடுக்கப்பட்ட தூர்வாரும் செயற்றிட்டத்தின் மூலம் ஏற்பட்ட சாதகமான விளைவுகள் குறித்தும், அச்செயற்றிட்டத்தை முன்னெடுக்கும்போது எதிர்கொண்ட சவால்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இந்த ஆண்டு குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற கலந்துரையாடலில் கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சாதகமான கருத்தை வெளிப்படுத்தியிருந்தமையை ஆளுநர் இங்கு நினைவுகூர்ந்தார். 

அதற்கமைவாக, இந்த ஆண்டு கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாகத் தூர்வாரப்பட வேண்டிய குளங்களை அடையாளப்படுத்தி, அவற்றுக்கான அனுமதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வழுக்கையாற்றுப் பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாருவதற்கும், அந்தச் செயற்பாடுகளைச் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக முன்னெடுப்பதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

இதற்கமைவாக, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் தலைமையில், நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தி, இத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்தால் ஏற்கனவே அனுமதிகள் வழங்கப்பட்ட சில குளங்களின் தூர்வாரும் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு வசதியாக, நிலஅளவைத் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஆளுநரால் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைவாகக் களப்பணிகளை மிக விரைவாக ஆரம்பிக்கவும் இணக்கம் காணப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் குளங்களைத் தூர்வாரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

No comments