புதிதாக மேலும் அவசர சேவைகள்!
புயல் அனர்த்தத்தின் பின்னரான அவசர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பரந்தளவிலான பொதுச் சேவைகளைப் 'பொருந்தும் அத்தியாவசிய சேவைகளாக' ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார்.
இன்று (28) வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
அரச கூட்டுத்தாபனங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் பிரதான சேவைகளை வர்த்தமானியில் உள்ளடக்கியுள்ளது.
அதன்படி, மின்சார விநியோகம், எரிவாயு உட்படப் பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, பொதுப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகச் சேவைகள், நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் விவசாயக் காப்புறுதிச் சேவைகள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் மருந்தகங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு, உணவு வழங்குதல் மற்றும் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சுகாதாரச் சேவைகளும் இந்த அத்தியாவசிய சேவைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஆம்புலன்ஸ் சேவைகள், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கி மற்றும் காப்புறுதிச் சேவைகள், உள்ளூராட்சி அதிகார சபைகளினால் மேற்கொள்ளப்படும் நீர், மின்சாரம், கழிவுநீர் அகற்றுதல், தீயணைப்பு மற்றும் கழிவு மேலாண்மை போன்ற அனைத்துச் செயற்பாடுகளும்; உள்ளடக்கப்பட்டுள்ளன.

Post a Comment