ஹோர்முஸில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகலாம் - பென்டகன்


ஹோர்முஸ் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என பென்டகன் மதிப்பீடு தெரிவிக்கிறது.

போர் முடிவடைந்தவுடன், ஈரான் புதைத்த கண்ணிவெடிகளை ஹோர்முஸ் நீர் வழிச் சந்தியிலிருந்து முழுமையாக அகற்றுவதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்று அமெரிக்க சட்டமியற்றுபவர்களுடன் பகிரப்பட்ட பென்டகனின் மதிப்பீட்டை மேற்கோள் காட்டி, வாஷிங்டன் போஸ்ட் புதன்கிழமை செய்தி வெளியிட்டது.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெயையும், அதன் இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதியையும் கடத்தும் ஒரு முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான இந்த நீரிணை, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து பெருமளவில் மூடப்பட்டிருப்பதால், எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன .

போஸ்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி , ஈரான் அந்த நீர்வழிப்பாதையிலும் அதைச் சுற்றியும் குறைந்தது 20 கண்ணிவெடிகளைப் புதைத்திருக்கக்கூடும் என்றும், அவற்றுள் சில ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைவிலிருந்து மிதக்கவிடப்பட்டிருப்பதால் அவற்றைக் கண்டறிவது கடினமாக உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு இரகசியக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

போர் முடிவதற்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என பென்டகனின் மதிப்பீடு தெரிவித்தது.

இருப்பினும், பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல், அந்தச் செய்தித்தாளிற்கு அளித்த பேட்டியில், அதன் தகவல் தவறானது என்று கூறினார்.

ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, கண்ணிவெடிகள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான அபாய மண்டலத்தை அறிவித்துள்ளது.

கண்ணிவெடிகள் குறித்த கவலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பான வழித்தடங்கள் குறித்து நிறுவனங்களுக்குத் தெளிவு தேவை என்று கடந்த வாரம் யேர்மன் கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஹபாக்-லாய்டின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

No comments