வடமாகாணத்திற்கு 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் அன்பளிப்பு


வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 'கிராம ஒளிவாழ்வுத் திட்டத்துக்காக' விஷன் கெயார் நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் (Vision Charts), வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களினூடாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கிராம ஒளிவாழ்வுத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள், எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், மாகாணத்தில் உள்ள 55 பிரதேச மருத்துவமனைகள் மற்றும் 48 ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையங்கள் என மொத்தம் 103 மருத்துவ நிலையங்களுக்கும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாது நிலையங்கள் உள்ளிட்ட 709 பிரிவுகளுக்கும் இந்தக் கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் விநியோகிக்கப்படவுள்ளன. 

இதற்கமைவாகவே குறித்த 750 அட்டவணைகளும் விஷன் கெயார் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாகப் பின்தங்கிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவான பயிற்சிகள் உரிய தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளதாக கண் சத்திர சிகிச்சை நிபுணர் எம்.மலரவன் இதன்போது குறிப்பிட்டார்.

விஷன் கெயார் நிறுவனம் தமது சமூகப் பொறுப்புணர்வுச் செயற்றிட்டத்தின் கீழ் இப்பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கண் சத்திர சிகிச்சை நிபுணர் எம்.மலரவன் மற்றும் விஷன் கெயார் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments