இலங்கை கடலில் தாக்கியது அமெரிக்காவா? ஈரானா?



இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

சுமார் 180 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஐரிஸ் தேனா என்ற போர்க்கப்பல், அதிகாலையில் ஒரு பேரிடர் அழைப்பை விடுத்த பின்னர் இலங்கைக்கு தெற்கே சுமார் 25 மைல் தொலைவில் கண்டறியப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 101 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட காயமடைந்த பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச கடல்சார் கடமைகளுக்கு இணங்க, இலங்கை மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படையின் இரண்டு கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 32 ஈரானிய மாலுமிகள் சிகிச்சைக்காக காலியில் உள்ள பிரதான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே இந்தியப் பெருங்கடலில் இருந்த ஒரு அமெரிக்க கப்பலைத் தாக்கியுள்ளதாக  ஈரான் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின்; கப்பலை இலக்கு வைத்து ஈரானிய கடற்படை தாக்குதல் நடத்தியது.

எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் தாக்குதல்; கப்பல் ஆகிய இரண்டுமே இலக்கு வைக்கப்பட்டதாகவும், அவற்றின் தளங்களிலிருந்து புகையும் நெருப்பும் எழும்புவதைக் காண முடிந்தது” என்றும் அது தெரிவித்துள்ளது.


No comments