இந்தியாவை தொடர்ந்து இலங்கையும் வரிசையில்!
இந்தியாவில் எழுந்துள்ள எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இரு கப்பல்களில் எரிவாயுவை மோதல்கள் நிறைந்த வளைகுடாவினூடாக இந்தியா வெற்றிகரமாக தருவித்துள்ளது.
இந்நிலையில் ரஸ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ என்பவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ரஸ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.அதன்போது இறக்குமதி குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.
இலங்கைக்கான ஈரான் தூதுவர், எரிபொருளை வழங்கத் தயாரென கூறியதை வரவேற்கிறோம். இருப்பினும் கப்பல் வசதிகளைக் கொண்ட நாடுகளே அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும், இலங்கைக்கு தற்போது அந்த வசதி இல்லை.
தற்போது பல எரிபொருள் முன்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் சில எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாட்டை வந்தடையவுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே எதிர்பார்த்தவாறாக கப்பல்கள் வருகை தராமையினால் இறக்குமதி செய்யப்படும் டீசலை மின் உற்பத்திக்கு பயன்படுத்தவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதனால் எரிபொருள் தட்டுப்பாடு அடுத்த சில நாட்களிற்கு மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment