பிரித்தானியாவில் நாமலுக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெற்றன!

ஊடக அறிக்கை
23.02.2026

பிரித்தானியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் யூனியன்களில் (Cambridge & Oxford Unions) இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உரையாற்றுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளன.

தமிழ் மக்களின் நீதிக்கான குரலை ஏற்று கேம்பிரிட்ஜ் யூனியன் ஏற்கனவே பின்வாங்கிய போதிலும், ஓக்ஸ்போர்ட் யூனியன் அமைதி காத்து வந்தது. ஆனால், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலண்டன் மட்டுமன்றி பிரித்தானியாவின் பல தூர இடங்களிலிருந்தும் திரண்டு வந்து பெரும் போராட்டத்தை நடத்தத் தயாரானார்கள். இந்தத் தீவிரமான உணர்வின் விளைவாக, நேற்று இரவு நாமல் ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்டது.

பொதுவாக ஓக்ஸ்போர்ட் யூனியன் (Oxford Union) ஒருமுறை அறிவித்த பேச்சுக்கள் அல்லது உரையாடல் நிகழ்வுகளை எந்தக் காரணத்திற்காகவும் திரும்பப் பெறுவதில்லை. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகக் கருதும் அந்த நிறுவனம், நிகழ்வுகளை தமது நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்குவது தனது புகழுக்கு இழுக்கு என்று கருதுவது வழக்கம்.
இருப்பினும், நாமல் ராஜபக்சவின் குடும்பம் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர் சமூகத்தின் கடும் எதிர்ப்பிற்குப் பணிந்து இந்த நிகழ்வை ரத்து செய்துள்ளது. இது ஒரு மிக அரிதான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும்.

நாமல் ராஜபக்சவின் பெற்றோர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த இனவழிப்பு போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சொல்லொண்ணா துயரங்கள் உலகறிந்தவை. அந்தப் கொடூர செயல்களின் தொடர்ச்சியாகவே இன்றும் ராஜபக்ச குடும்பத்தினர் பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய ஒரு பின்னணியைக் கொண்டவருக்கு உயரிய மேடைகளை வழங்குவது அறமற்றது என்பதைத் தமிழ் மாணவர் சமூகம் மிகத் தெளிவாக எடுத்துரைத்தது.

இந்த வெற்றிக்காகக் களத்தில் நின்ற மாணவர்களுக்கும், இவர்களை ஒருங்கிணைத்த (TYO) தமிழ் இளையோர் அமைப்பினர், பல்வேறு தொலைதூர இடங்களிலிருந்து பயணப்பட்டு வரத் தயாராக இருந்த பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும், தமிழ் அமைப்புக்களுக்கும், இது தொடர்பாக மின்னஞ்சல்கள் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட அமைப்புக்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

"எமது தாயக விடுதலைக்காகவும் . நீதிக்காகவும் ஒன்றிணைந்து ஒன்றிணைந்து தொடர்ந்து பலமாகப் பணியாற்றுவோம்."

No comments