வடக்குக்கு மீண்டும் மழை - விவசாயிகளுக்கு விசேட அறிவிப்பு
வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, வட மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.அதேவேளை கிழக்கு, மத்திய, மேல், வட மத்திய மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீளவும் எதிர்வரும் 16ம் திகதியளவில் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் 16 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை இலங்கைக்கு அதிக மழை கிடைக்க காரணமாக விளங்குகின்ற மேடன் ஜுலியன் அலைவானது (MJO) எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாக் கடற்பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதனால் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களிலும் மார்ச் மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எனினும் இதனை அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும்.
எனவே இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என தெரிவித்தார்.

Post a Comment