அநுரவின் காட்சி அரசியலும் இலங்கையின் மாயாஜாலமும்! பனங்காட்டான்
தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தில் ரஜினிகாந்தாக மேடைகளில் தோன்றிய அநுர குமர இப்போது காட்சி அரசியல் செய்து செல்பிகளின் நாயகராகியுள்ளார். தமது பதவிக்காலம் முடிந்து அமெரிக்கா திரும்பும் அந்நாட்டின் தூதுவர் ஜுலி சங்இ இலங்கையில் உண்மையில் மாயாஜாலம் உள்ளதென்று கூறியுள்ளார். இது யாரைக் குறிக்கிறது?
தமிழ் நாட்காட்டியில் தை மாதம் பிறக்கும்போது தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்கள் நம்பிக்கை கொள்வது வழக்கம். இதனை வாழ்த்தாகவும் கூறிக்கொள்வர்.
பெரும்புயல் சீற்றத்தில் பேரழிவைக் கண்ட தீவு அதிலிருந்து மீள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுத்து வருகிறது. சர்வதேசம் தாராளமாக அள்ளிக்கொடுக்கிறது.
தைப்பொங்கல் தமிழருக்கான பெருநாள் என்பதை முன்வைத்து வடபகுதிக்கு தமது விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமர இங்கு அம்மண்ணின் மைந்தனாகத் தம்மை காட்டிக்கொண்டு நிகழ்ச்சிகளில் பங்குபற்றினார். ஆனால்இ தை பிறந்தும் தையிட்டி மக்களுக்கு எந்த விடிவும் கிடைக்கவில்லை. மக்களுக்காக போராடிய மக்கள் சிலர் நீதிமன்ற படிகளில் ஏற்றப்பட்டுள்ளனர்.
அநுர குமரவின் வடபகுதி விஜயத்தின் எதிர்பார்ப்புகள்இ வாக்குறுதிகள்இ மக்கள் வழங்கிய வரவேற்பு ஆகியவைகளுக்குள் செல்வதற்கு முன்னர் இவர் தலைமையிலான ஆட்சியின் அரசியற் செயற்பாடுகளை கவனிக்க வேண்டும். இவர்களது பிரதமர் ஹரிணி அமரசூரியவை மையப்படுத்தி விரிக்கப்பட்டுள்ள வலை சற்று தொய்ந்து காணப்படுகிறது.
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படவிருந்த புதிய கல்வித்திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்த எதிரணியினர்இ பாடப்புத்தகத்தில் திட்டமிட்டு நுழைக்கப்பட்ட பாலியல் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி ஆட்சியை அலுப்புத்தட்ட வைக்க அங்கலாய்க்கின்றனர். ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட விமல் வீரவன்சஇ உதய கம்மன்பில போன்றவர்கள் தங்களை மீண்டும் மேடையேற்ற இதனை வாய்ப்பாக்குகின்றனர். ஆசிரிய சங்கங்கள் போர்க்கொடி தூக்கி நிற்கின்றன. பௌத்த பிக்குகளும் இதற்குள் இழுத்து விடப்பட்டுள்ளனர்.
மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் போக்கில் புதிய பாடத்திட்டத்தை ஆரம்பிப்பதை அரசு ஒரு வருடத்துக்கு பின்போட்டுள்ளது. எனினும் இதற்குப் பொறுப்பாகவுள்ள கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை எதிரணியினர் கைவிடவில்லை. இதே கோரிக்கையுடன் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்த விமல் வீரவன்ச தம்மால்தான் பாடத்திட்டம் பின்போடப்பட்டதாகக் கூறி சத்தியாக்கிரகத்தை (இப்படிக் கூறுவதே பொருத்தமாகத் தெரியவில்லை) கைவிட்டார். நீதிமன்ற வழக்கொன்றுக்கு அன்று செல்லாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படுமென்ற அச்சத்தினாலேயே இவர் சத்தியாக்கிரகத்தை கைவிட்டதாக ஆட்சித்தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
ஹரிணி அமரசூரிய மீதான நம்பிக்கையீன பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் ஹரிணி எந்தப் பதவியிலிருந்தும் நீக்கப்பட மாட்டாரென்றும்இ அமைச்சரவை மாற்றமெதுவும் கிடையாதென்றும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஆனாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடும் நிலையில் எதிரணிகள் இல்லை. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல தமிழ் கட்சிகளும் ஹரிணிக்கு ஆதரவாக நிற்கின்றன. இதற்காக அவர்களுக்கு நன்றி கூறுவதைப் போன்று அலரிமாளிகையில் பல்வேறு மதத்தலைவர்களையும் அழைத்து பொங்கல் விழாவை ஹரிணி அமரசூரிய கோலாகலமாக செய்து காட்டியுள்ளார்.
அண்மைய நாட்களில் இவரைப் போன்று ஊடகங்களில் இன்னொரு முக்கிய பெண்மணி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். நான்கு வருடங்கள் இலங்கையில் அமெரிக்காவின் தூதுவராகக் கடமையாற்றிவிட்டு கடந்த 16ம் திகதி தமது நாட்டுக்குத் திரும்பியிருக்கும் ஜுலி சங்இ தமது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்புவதற்கு முன்னர் சில முன்னாள் ஜனாதிபதிகள்இ தற்போதைய ஜனாதிபதி உட்பட பல முக்கியஸ்தர்களை நேரில் சந்தித்து பிரியாவிடை பெற்ற பின்னர் தமது எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
இலங்கையர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் தங்கள் புருவத்தை உயர்த்தும் வகையில் இவரது வாசகம் அமைந்துள்ளது. இலங்கையில் உண்மையிலேயே மாயாஜாலம் உள்ளது என்பது இந்த வாசகம். வுhநசந ளை ளழஅநவாiபெ வசரடல அயபiஉயட யடிழரவ ளுசi டுயமெய என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நிறுத்தாதுஇ இனி என்ன நடக்கப்போகிறது என்பதில் நம்பிக்கை கொள்கிறேன் என்றும் புரிந்துகொள்ள முடியாத நடையில் பதிவிட்டுள்ளார்.
மாயாஜாலம் உள்ளது என்று இவர் குறிப்பிட்டது எதுவாக இருக்கலாம் என்பது அவரவர் கற்பனைக்கும் சர்ச்சைக்கும் உரியது. காலிமுகத்திடலில் இடம்பெற்ற அறகலைய போராட்டத்தின் இயக்குனராக இவரே இயங்கியதாக அப்போது பெருமளவில் பேசப்பட்டது. அறகலைய போராட்டக்காரர்களுக்கு காலிமுகத்திடலுக்கு அருகிலிருந்த ஹோட்டலிலிருந்து இரவு பகலாக சுவையான உணவுகள் விநியோகிக்கப்பட்டதற்கும் இவரே ஏற்பாடு செய்ததாக சில ஊடகங்களில் எழுதப்பட்டும் இருந்தது.
அப்படியென்றால்இ கோதபாய நாட்டைவிட்டு தப்பியோடி பதவி துறந்ததுஇ மகிந்த ராஜபக்ச பதவி இறக்கப்பட்டு இரவோடிரவாக ஹெலியில் கொழும்பை விட்டுப் பறந்ததுஇ ராஜபச்சக்கள் கூண்டோடு அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டதுஇ ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி ஜனாதிபதியானதுஇ ஜே.வி.பி.யின் அடையாளமான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றியைப் பெற்று ஜனாதிபதியாகவும்இ நாடாளுமன்றமாகவும்இ உள்ளாட்சிச்; சபைகளைக் கைப்பற்றியதும் என்று எதனை இவர் மாயாஜாலம் எனக்குறிப்பிட்டார் என்பது இதுவரை எவருக்கும் புரியவில்லை. அந்தகன் யானையைத் தடவிய கதையாக மாயாஜாலக் கதை நீண்டகாலத்துக்கு தொடரும் சாத்தியமுண்டு.
அநுர குமரவின் வடபகுதிக்கான விஜயம் சற்று நோக்கப்பட வேண்டியது. கடந்த மூன்று தேர்தல் காலத்திலும் தமிழ் பகுதிகளுக்கு இவர் மேற்கொண்ட விஜயங்களுக்கும் இந்த விஜயத்துக்கும் வேறுபாடு காணப்படவில்லை. மழையோ வெய்யிலோ புகமுடியாத அலங்காரக் கூடாரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆசனங்களில் அமர்த்திருந்தனர். வேலணை ஆலயம் ஒன்றின் முன்றலில் பொங்கல் பானையில் இவரே அரிசியிட்டு தைப்பொங்கலை ஆரம்பித்து வைத்தார். மூத்தோர்இ இளையோர் என ஆண் பெண் இருபாலாரும் திரண்டிருந்தனர். தமிழர் பாரம்பரிய முறைப்படி அநுர குமர வரவேற்கப்பட்டார். நடன நங்கைகள் மலர்ந்த முகத்துடன் அவரது கரத்தை இறுக்கிப்பிடித்த ஒளிப்படங்கள் இணையங்களில் பரவிக்கிடக்கின்றன. செல்பி எடுத்தவர்கள் இன்னொரு தொகையினர்.
யாழ்ப்பாண நாகவிகாராதிபதியும்இ நயினாதீவு விகாராதிபதியும் இவரது கைகளில் மந்திரிக்கப்பட்ட நூல்களை கட்டி வாழ்த்தினர். மறந்தும்கூட தமிழர் பிரச்சனை தீர்வு பற்றி எதுவும் கூறவில்லை. தமது அரசின் சில செயற்திட்டங்களை வழமையான பாணியில் எடுத்துக்கூறி கைதட்டலை பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் தமக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை - மக்களே எனது கவசம் என்பதைக் காட்டுவதைப்போல பொதுவீதியொன்றில் அரைக்காற்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்த காட்சி பிரபலமாகியுள்ளது. இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் சீருடையில் இவர் அருகில் செல்வதாகக் காட்டப்பட்டது.
இன்னொரு ஒளிப்படம் இவர் உணவருந்துவது. தரையில் தடுக்கொன்றில் சப்பாணி கட்டி வேட்டியுடன் அமர்ந்தவாறு தலைவாழையிலையில் வைக்கப்பட்டிருந்த மூங்கில் குழல் பிட்டை குழம்புக் கறியுடன் கைகளால் பிசைந்து அவர் சாப்பிடும் காட்சி இந்த விஜயத்தின் கிளைமாக்ஸ். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சிம்பிளாக வந்து எம்மவரில் ஒருவராக காட்சி கொடுத்து பிரபல்யமானதுபோல அநுர குமரவின் இம்முறை விஜயம் நன்கு திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. இதனை இவரது காட்சி அரசியல் என்று குறிப்பிட்டால் தவறிருக்காது. இதன் அறுவடையைப் பொறுத்தே வெற்றியைக்காண சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.
சாவகச்சேரி தொகுதியிலுள்ள மீசாலை என்ற இடத்தில் அமைந்துள்ள பாடசாலை வளவில் குடும்ப வீடமைப்புத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரனின் தொகுதி இதுவென்று சொல்லப்படுகிறது. தமிழரசுக் கட்சி சுமந்திரனின் வலது கரமான சயந்தனின் தொகுதியும் இதுதான். அதனால்தான் இந்த இடத்தை அநுர தரப்பினர் தெரிவு செய்திருக்கலாம் என்று வதந்தியும் உண்டு.
இத்தொகுதியிலுள்ள நாவற்குழி என்ற இடத்தில் 1980களில் பிரதமராகவிருந்த பிரேமதாச (சஜித்தின் தந்தை)இ கம்உதாவ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பெருமளவு வீடுகளை நிர்மாணித்தார். 1983 யூலை இனஅழிப்பின் பின்னர் ராணுவத்தினரின் குடியிருப்பாக இது மாற்றமடைந்தது. இப்போது பௌத்த விகாரையுடன் சிங்கள மக்களின் குடியேற்றத்திட்டமாகியுள்ளது. மீசாலை வீடமைப்புத் திட்டமும் அவ்வாறு மாற்றம் பெறாதிருக்கப் பார்த்துக் கொள்வது தமிழ்த் தேசிய கட்சியினர் என்று கூறிக்கொள்பவர்களின் பாரிய கடமை.
அநுர குமரவின் வடபகுதி விஜயத்தை தமிழரசுக் கட்சி புறக்கணித்தது. இது கட்சியின் முடிவு என சுமந்திரன் முதலில் அறிவித்திருந்தார். கட்சிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையெனவும் தவிசாளர்களுக்கு மட்டும் அழைப்பு வந்ததாகவும் அதனை அவர்கள் பகிஸ்கரித்துவிடடதாகவும் பின்னர் சொன்னார்.
இவரை பதில் செயலாளராக்குவதற்காக தமது பதவியை இராஜினாமா செய்த சத்தியலிங்கம் வேறொரு விளக்கம் கொடுத்துள்ளார். ஜனாதிபதியின் மீது தாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும்இ முன்னையவர்கள்போல இவரிடம் கொடூர முகம் இல்லையெனவும்இ இவரது வருகை பற்றி தாங்கள் அறிந்திருந்ததாகவும்இ ஆனாhல் தங்களுக்கு அழைப்பு வரவில்லையென்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அழைப்பு வந்திருந்தால் தாங்கள் போயிருப்போம் என்பது போன்றுள்ளது சத்தியலிங்கத்தின் கூற்று.
அநுரவின் வடபகுதி விஜயத்தையும் தமிழரசுக் கட்சியின் கருத்துகளையும் பார்க்கும்போது இவ்விடயத்தில் இவர்கள் குழம்பியிருப்பதுபோல தெரிகிறது. கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்குமோ தெரியாது.




Post a Comment