தையிட்டி விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு துண்டேனும் திருப்பி தரோம் என்கிறார் விகாராதிபதி


தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்திய பொதுமக்களின் காணிகளில் ஒரு சிறு துண்டேனும் திருப்பி கொடுக்க முடியாது என திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. 

அந்தக் குழு கொழும்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. இதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளில் பகுதியளவேனும் விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏமாற்றம். 

திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளை தவிர ஏனைய காணிகளை மக்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளை சூழவுள்ள வேலிகளை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன

இந்நிலையில் தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி , தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் ஒரு பகுதியை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிப்பார் அல்லது அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என காணி உரிமையாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அந்நிலையில் குறித்த செய்தி அவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. 

காணிகளை விடுவிக்க முடியும் - கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை. 

தையிட்டி விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளில் ஒரு துண்டேனும் மீள வழங்க முடியாது என வெளியான செய்தி தொடர்பில் கடற்தொழில் அமைச்சரிடம் கேட்ட வேளை, 

தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்கவே எமது அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அடுத்த கட்ட கலந்துரையாடல் மிக விரைவில் நடைபெறும். அதில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

No comments