தையிட்டி விவகாரம்:சஜித்திற்கு அனுர மீது கோபம்!

 


பௌத்த மதத் தலங்களை வழிபடுவது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதாக அமைகின்றதென தெரிவித்துள்ளார்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

நமது நாட்டின் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள உச்ச சட்டத்தின்படி, பௌத்தம் விசேட ஸ்தானத்தை பிடித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளபடி, பௌத்த மதத்தைப் பாதுகாத்து போலவே ஏனைய மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கியுள்ளது. இந்நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை எப்போதும் பாதுகாத்துக் கொண்டு, சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் ஒரு திட்டத்தை அனைவரும் வகுத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“போயா தினத்தில் 'சில்' எடுப்பதற்காக மகா போதியை தாண்டியுள்ள வழிபாட்டு தலங்களுக்கு வழிபட வருகிறார்கள். இங்கு இருப்பது குரோதம் தான்” என்று அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த கூற்றை நான் நிராகரிக்கிறேன். நாடு முழுவதும் பரவிக் காணப்படும் பௌத்த மத வழிபாட்டுத் தலங்களில் வழிபட உரிமை காணப்படுகின்றன. இங்கு குரோததத்தை வைத்துக் கொண்டு மக்கள் வழிபட வருவதில்லை. நமது நாட்டில் பல பகுதிகளிலும் அமைந்து காணப்படும் புனித தலங்களில் வழிபடுவதற்காக மக்கள் பல்வேறு பிரதேசங்களுக்குச் செல்ல ஆசைப்படுகின்றனர். இன மத பேதங்கள் இல்லாமல் பௌத்த மத விகாரைகளை வழிபடுகின்றனர், அவற்றை பார்வையிடுகின்றனர். வடக்கிலிருந்து மக்கள் கதிர்காமத்தை வழிபட வருகின்றனர். கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயங்களுக்குச் சென்று மத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது கூட, வெறுப்பு உச்சத்தை எட்டும் என்று ஒருபோதும் நினைப்பதில்லை. ஒவ்வொரு இனங்களிலும் சிறு தொகையிலான தீவிர போக்குகள் கொண்ட குழுக்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு அங்கு இடமில்லை. பௌத்த மதத்தின்படி, நடுத்தரப் பாதையைப் பின்பற்றும் நமது நாட்டில் அடிப்படைவாதத்திற்கு இடமில்லை. அடிப்படைவாதத்தை உருவாக்கும் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடக்கூடாது. எந்தப் பிரதேசமாக, எந்த மாகாணமாக இருந்தாலும், மத நடவடிக்கைகள் குரோதத்தை தூண்டும் என்று கூறுவது தவறாகும். ஜனாதிபதியின் இந்த கூற்றானது கடும்போக்காளர்களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) ஊடகங்களுக்கு விசேட கருத்தை விடுத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அரசியலமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்ட தனித்துவமான மற்றும் முக்கிய இடத்திற்கு முரணான கருத்துக்களை வெளியிடக்கூடாது.

ஏனைய மதங்களையும் அவற்றின்  கலாச்சாரங்களையும் பாதுகாக்க வேண்டும். இந்த ஒற்றுமையும் நல்லிணக்கமும் பாதுகாக்கப்படும் வகையில் நாம் நடந்த கொள்ள வேண்டும். இதனால் பாதுகாப்பான நாடு உருவாக்கும். இதன் மூலம் தேசிய பாதுகாப்பு உறுதிபடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 


நாட்டில் பிளவுகளுக்கு வழிவகுக்கும் விடயங்களை முன்னிலைப்படுத்தக்கூடாது. பெற்றோர்கள் குழந்தை பருவத்திலிருந்தே அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக்கொடுத்திருப்பதால், நாம் அவற்றை மதித்து ஒழுக வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூக குரோதத்தையும் வெறுப்பையும் உருவாக்கி அரசியலில் அதனைப் பேணிக் கொள்வது சாத்தியமற்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments