உண்ணாவிரத பூச்சாண்டி!



திருகோணமலை கோட்டை கடற்கரையில்; புத்தர் சிலை நிறுவியமை தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கமறியலில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட கஸ்ஸப தேரர்,உணவை உண்பதற்கு மறுத்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை, வியாழக்கிழமை இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொட வனவாசி காசியப்ப தேரர் உட்பட நான்கு தேரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்களை திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுடீன் முன்னிலையில், புதன்கிழமை (14) அன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை எதிர்வரும் 19 ந் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

கரையோர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி கடற்கரையில்  2025 நவம்பர் மாதம் கட்டுமானத்தை அமைத்தமை மற்றும் சிலையை வைத்தது தொடர்பில் வனவாசி பலங்கொட காசியப்ப தேரர்,திருகோணமலை கோட்டை விகாராதிபதி கல்ஞானவன்ச திஸ்ஸ தேரர்,சுகித்த வன்ச தேரர்,சிறிமாபுர விகாரையை சேர்ந்த நந்த தேரர் ஆகிய தேரர்களும்,கோட்டை விகாரையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான தீபானி லியனகே,விதுரங்க லொக்கு கலப்பதி,எல்.ரீ.பெரேரா,பியலால் பிரேமசிறி,தெக்கும் துலார குணதிலக்க ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


No comments