பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம் - பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை முற்றாக வெளியேறியுள்ளனர்.
காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி , காணியை மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசிதனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார்.
மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான 31 பரப்புடைய காணியை யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி இராணுவ முகாம் அமைத்திருந்தனர்.
குறித்த காணிக்குள் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான "கொல்களம்" இருந்த நிலையில் , அதுவும் இராணுவத்தினரின் பிடிக்குள் இருந்ததால் , தெல்லிப்பழை பகுதியில் வாடகை இடமொன்றில் கொல்களம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, காணி பிரதேச சபைக்கு மீள கிடைத்த நிலையில் , அது தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கையில்,
குறித்த காணியில் சபைக்கு வருமானத்தை ஈட்ட கூடிய வகையில் மிக சிறந்த பொருளாதார திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காணிக்குள் முன்னர் கொல்களம் இயங்கி வந்தது. அதனை மீள அவ்விடத்தில் இயக்குவது தொடர்பில் அப்பிரதேச மக்கள் மற்றும் அப்பகுதி வட்டார உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு , அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதேவேளை கடந்த வாரம் சுழிபுரம் பகுதியில் இருந்த மினி இராணுவ முகாம் ஒன்றும் அகற்றப்பட்டு , அக்காணிகள் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment