நெடுந்தீவு செல்ல இருந்தோரை இறந்தவரின் சடலத்துடன் பயணிக்க கூறியதால் பயணிகள் குழப்பம்


நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால் , இறந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால் , குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை ஏற்பட்டது

குறிகாட்டுவான் இறங்கு துறையில் இன்றைய தினம் திங்கட்கிழமை , நெடுந்தீவில் உள்ள அரச திணைக்களங்களில் வேலை செய்வோர் , நெடுந்தீவுக்கு தேவை கருதி செல்வோர் , சுற்றுலா செல்வோர் உள்ளிட்டவர்களுடன் , மேலதிகமாக வெள்ளநிவாரணம் வழங்குவதற்கான அரச உத்தியோகஸ்தர்கள் , வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறிதரன் குழுவினர் என 150க்கும் மேற்பட்டோர் நெடுந்தீவு செல்வதற்காக காத்திருந்தனர். 

குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் நெடுந்தாரகை படகு , வந்த வேளை அதில் ஏறுவதற்கு பலரும் முயன்ற வேளை அந்த படகில் 100 பேரை மாத்திரமே ஏற்ற முடியும் என கடற்படையினர் திடமாக கூறி விட்டனர். அதனால் ஏனையோர் நெடுந்தீவு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. 

அதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் , நெடுந்தீவு பிரதே செயலர் , யாழ்.மாவட்ட செயலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வேளை நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் , குமுதினி படைக்கும் பழுதடைந்துள்ளமையால் , சேவையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

பின்னர் , இறந்தவரின் சடலத்துடன் , குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி தனியார் படகு புறப்படவுள்ளதாகவும் , அந்த படகில் ஏறி செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. 

அதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால்  அவ்விடத்தில் குழப்பமான நிலைமை காணப்பட்டது. 

பின்னர் , பிறிதொரு தனியார் படகு ஏற்பாடு செய்யப்பட்டு , அங்கிருந்த அனைவரையும் நெடுந்தீவு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது 

நெடுந்தீவில் வேலை செய்யும் பலரும் சனி ஞாயிறுகளில் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் திங்கட்கிழமை நெடுந்தீவு நோக்கி செல்வதால் , திங்கட்கிழமை காலையில் அதிகளவானோர் வருகை தருவார்கள். இந்நிலையில் நிவாரண பணிகளுக்காக மேலும் பலரும் வருகை தருவார்கள் எனவும் தெரிந்த நிலையில் பயண ஒழுங்குகளை உரிய முறையில் செய்யாது, இருந்த அரச உயர் அதிகாரிகளை பலரும் கடிந்துகொண்டனர். 

No comments